இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அதிரடியான பொலிடிகல் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் ரத்தம் திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் ஆண்டனி அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஒன்று நேர்ந்தது. இந்த இழப்பு விஜய் ஆண்டனி அவர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்தது போலவே அவரது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியின் சோகத்தையும் கொடுத்தது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் நம்மோடு பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரோடு பேசும் போது, “ரத்தம் பற்றி சில விஷயங்கள் பேசலாம் சார் இன்னும் சில தினங்களில் படம் ரிலீஸாக உள்ளது. விஜய் ஆண்டனி சாரை நாங்கள் எப்போதும் ஒரு பாசிட்டிவான ஆளாக ஒரு இளகிய மனம் கொண்டவராக தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது அவர் எப்படி இருக்கிறார்?” என கேட்டபோது, “எனக்கு இப்போது என்ன பெருமையாக இருக்கிறது என்றால் இந்திய சினிமாவில் இதை யாரும் பண்ண மாட்டார்கள் நான் சேலஞ்ச் பண்ணி சொல்கிறேன். இவ்வளவு பெரிய துக்க நிகழ்வு நடந்திருக்கிறது. ஆனால் இப்போது அவர் ப்ரமோஷனில் இறங்கி எல்லா சேனலுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். எங்கள் படத்திற்கு துணையாக ப்ரீ ரிலீஸ் ஈவன்டிற்கு வந்திருக்கிறார். இது எப்படி நடந்தது என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் அவருடனே நான் இரண்டு நாட்கள் இருந்தேன். அன்று நிகழ்வு நடந்த நாளில் காலையிலிருந்து அவரோடு இருந்தேன் இரண்டு நாட்கள் கழித்து அவரோடு இருக்கிறேன். அன்று காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு, நான் கிளம்பும்போது அவரிடம், "பார்த்துக் கொள்ளுங்கள் சார் வருகிறேன்" என சொன்னேன். அப்போது, “சார் நம்முடைய ஸ்கெடியூல் படி எல்லாமே நடக்க வேண்டும் சார்” என்றார். “என்ன சார்” என கேட்டபோது, “28ஆம் தேதி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி” என்றார். எனக்கு என்னமோ நானே தப்பு செய்கிறேன் என்பது போல் இருந்தது. “சார் உங்களுக்கு ஓகேவா” என்று கேட்டேன். “சார் படத்தை பாதிக்கிற மாதிரி நான் எதுவும் செய்யக் கூடாது உங்கள் படம் பாதிக்கக் கூடாது என்னுடைய நிகழ்வு உங்களை பாதிக்கக் கூடாது அதனால் ரத்தம் படத்தினுடைய ப்ரீ ரிலீஸ் நிகழ்வும் சரி, ப்ரோமோஷன்களும் சரி நான் கொடுத்து விடுகிறேன். ஒன்றே ஒன்று ஊடகங்களிடம் சொல்லுங்கள் பர்சனல் விஷயத்தைப் பற்றி பேச வேண்டாம் என்று மட்டும் சொல்லுங்கள். படத்தைப் பற்றி மட்டும் பேசுவோம் நான் தயாராக இருக்கிறேன்” என்றார். இன்று கலாட்டாவிலிருந்து எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுக்கிறார். படத்தைப் பற்றி அவ்வளவு சப்போர்ட்டாக பேசுகிறார். நான் இந்த துறையில் இத்தனை வருடமாக பயணம் செய்ததில் இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததே கிடையாது. ஒரு சின்ன சம்பவம் நடந்தாலே நடிகர்கள் நடிகைகள் எல்லாம் என்ன சொல்வார்கள் என்றால் “நான் வர முடியாது எங்கள் வீட்டில் துக்கம் நடந்து விட்டது நான் வர மாட்டேன்” என சொல்வார்கள். நாமும் அவர்களை வாயை திறந்து எதுவும் கேட்க முடியாது. ஆனால் இவர் பத்து நாள் கூட ஆகவில்லை அவர் என்ன சொல்கிறார் என்றால் “இந்த படம் என்னால் பாதிக்கப்படக்கூடாது இந்த நிகழ்வு என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் தனிப்பட்ட சோகங்கள் என்னோடு தங்கி விடட்டும் உங்கள் படத்திற்கு எந்த வித பாதிப்பும் வரக்கூடாது” என்ற ஒரு மனித நேயம் இருக்கிறதே இதெல்லாம் மிகவும் அரிது. இந்த ரத்தம் படம் எனக்காக இல்லை என்றாலும் விஜய் ஆண்டனி சாருக்காக ஜெயிக்கும் என நான் ஆசைப்படுகிறேன். மிகப்பெரிய அளவில் ஜெயித்து மக்கள் அவருக்கு அந்த ஆதரவை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.