தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது துரை பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தளபதி விஜய் இணைகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் திரு.தனஞ்ஜெயன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “இப்போது தளபதி விஜயின் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வருகிறது. முதல் பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே தளபதி 68 திரைப்படம் ஒரு பெரிய அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?” என கேட்டபோது,
“இது எப்படி என்றால் அவர் ஒரு விழா நடத்துகிறார். அந்த விழா வைத்தவுடன் எல்லோரும் வந்து அதை தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து ஒரு கதை சொல்வார்கள். அவர்களுக்கே தெரியாத ஒரு கதை எல்லாம் செய்வார்கள். அதாவது வெங்கட் பிரபு சாரே இதை முடிவெடுத்து இருப்பாரா? என தெரியாது. இந்த மாதிரி ஒரு அரசியல் படம் பண்ண வேண்டும் என்று, இதெல்லாம் போலியான செய்திகள் தான்.. உண்மையாகவே என்ன கதை.. எப்போது என்ன பண்ணப் போகிறார்கள், எதுவுமே யாருக்கும் தெரியாது. இதெல்லாம் எப்போது பார்க்க வேண்டும் என்றால் ஒரு ஃபர்ஸ்ட் லுக் வரும் போதோ அல்லது டைட்டில் வரும்போதோ நம்மால் கொஞ்சம் யூகிக்க முடியும். இதுவரை அது மாதிரி எதுவுமே வராத போது இது ஒரு அரசியல் கதையாக இருக்கப் போகிறது. இன்னும் சொல்லப்போனால் நேற்று எல்லாம் ஒரு பெரிய வதந்தி, மூன்று வருடத்திற்கு விஜய் அவர்கள் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று.. விஜய் தரப்பிலிருந்து அவர்களும் உடனே விளக்கம் அளித்தார்கள். மொத்தமாக அவரைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரைக்கும் இது எல்லாமே வதந்திகள் தான் விஜய் சார் ஒட்டு மொத்தமாக ஒரு அரசியல் படத்தை பண்ண மாட்டார். காரணம் என்னவென்றால் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகள் அவரை நிறைய பேர் ரசிக்கிறார்கள். அதனால் அரசியல் படமாக செய்தால் அந்த ஒரு பகுதி அடிபட்டு போகும். ஒரு மாஸான தளத்தில் ஒரு அரசியல் கருத்து இருக்கும் மாதிரியான படம் பண்ணுவார்.” என தனஞ்செயன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். அந்த முழு பேட்டையை கீழே உள்ள லிங்கில் காணலாம்.