சமூகப் பிரச்சினைகளின் மீது அக்கறை கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் வழியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீட் தேர்வு குறித்து பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 

நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும் "நீலம் பண்பாட்டு மையம்' சார்பாக விடுக்கப்படும் கோரிக்கை. சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன இதன் காரணமாக எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டம் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஏற்றத்தாழ்வு கொண்ட இச்சமூக அமைப்பில் தேவைக்கேற்றார் போல் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மொழி, கலாச்சாரம், தொழில் உள்ளிட்டவற்றில் பன்முகத்தன்மை நிலவும் நாட்டில் ஒரே கல்வி என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. இதனை மாற்றுவதற்கான ஒரே வழி கல்வி, பாடத்திட்டம், தேர்வுசார்ந்த விசயங்கள் மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் வலியுறுத்துகிறோம். கல்வி என்பது மனத்தடைகளை அகற்றி தன்னம்பிக்கையையும் சமூக விடுதலையையும் அடைவதற்கான கருவி. 

இந்நிலையில்தான் நீட் உருவாக்கக்கூடிய தாக்கம் குறித்த ஆய்வறிக்கையைத் தயார் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதிபதி மதிப்பிற்குரிய ஏ.கே. ராஜன் அவர்களது தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்த தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கும் அதே வேளையில் கால தாமதமில்லாமல் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 

பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், திரைத்துறையினர், கலை இலக்கியச் செயல்பாட்டினர், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் ஒன்று திரண்டு நம் கருத்துகளைத் தெரிவிப்போம். neetimpact2021@gmail.com என்கிற முகவரிக்கு நீட் தேர்வின் பாதிப்புகளை மின்னஞ்சல் செய்வோம். எனவே வரும் 23ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.மாணவர்களின் சமூக, கல்வி விடுதலைக்குத் துணை நின்று, சனநாயகத்தை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டு அரசை முழு மனதார நம்பி இம்மனுவைத் தங்களின்
முன் வைக்கிறோம்.
நீலம் பண்பாட்டு மையம் &
பா.இரஞ்சித்
திரைப்பட இயக்குனர்

என தெரிவித்துள்ளார் முன்னதாக நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து முக்கியமான அறிக்கையை வெளியிட்ட நிலையில் தொடர்ந்து ரஞ்சித் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.