இந்திய திரையுலகின் நடிப்பு பொக்கிஷம் என்றால் அது சியான் விக்ரம் தான். பாத்திரத்திற்கு ஏற்றவாறு உழைக்கும் விக்ரம், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதன் படப்பிடிப்பு கடந்த (மார்ச் 10) முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சீயான் 60 என அழைத்து வருகிறார்கள். இதில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், விக்ரமுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிவார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. பல்வேறு படங்களில் அனிருத் பணிபுரிவதால் இந்தப் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கடைசியாக படத்தில் நடிகர் பாபி சிம்ஹா இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் படத்தில் நடிகர் சனத் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. சனத் கடைசியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்.