தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ  என தனக்கே உரித்தான பாணியில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய திரைப்படம் பிசாசு. ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த பிசாசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகும் பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ROCKFORT என்டர்டெயின்மென்ட், தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் உருவாகும் பிசாசு 2 படத்தில் முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து இருக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் வெளியான ட்ரிப்பிள்ஸ் மற்றும் நவம்பர் ஸ்டோரி உள்ளிட்ட வெப்சீரிஸில் பிரபலமான நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகிவரும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

பின்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது பிசாசு 2 திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியானது. பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. பரபரப்பாக பிசாசு2 படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.