முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

நடிகையின் இந்த பாலியல் புகாரின் பேரில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த மாதம் 20 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

பின்னர், மணிகண்டன் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 

கடைசியாக, மணிகண்டன் வழக்கில், 3 வதாக மறைத்து வைக்கப்பட்ட செல்போன் மீட்கும் பணிகளில் போலீசார் இறங்கி உள்ளதாகவும், இது இந்த வழக்குகிற்கு  தேவையான மிக முக்கியமான ஆதாரமாகப் பார்க்கப்படுவதாகவும், அதனைப் பறிமுதல் செய்யும் பணியில் தனிப்படை போலீசார் மிகத் தீவிரமாக ஈடுபட்டும் வந்தனர். இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், “எனக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மணிகண்டனுக்கு உத்தரவிடக் கோரி” துணை நடிகை சாந்தினி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்து உள்ளார். 

அந்த மனுவில், “சென்னையில் இருந்துகொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினாலும், தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும்” என்றும், எனவும் அவர் தனது மனுவில் கோரியிருக்கிறார்.

மேலும், “திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது, பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நான் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதாவது, “மாத செலவுகள், மருத்துவ செலவு, வாடகை போன்றவற்றிற்கான இடைக்காலத் தொகையாக 2.80 லட்சம் ரூபாய் வழங்கவும், அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். இந்த வழக்கின் விசாரணையை சைதாப்பேட்டை நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இதனால், சற்று சத்ததே இல்லாமல் இருந்த இந்த வழக்கு மீண்டும் சூடுப்பிடித்துள்ளது.