“எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மூலம் அதிமு.கவை அழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும்” என்று, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக சுமார் ஒரு மாதகாலம் ஆவணங்களையும் ஆதாரங்களையும் திரட்டியதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில், தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைப்பெற்ற ஆலோசனக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு நடத்தப்படுவதற்கு கண்டனம்” தெரிவித்தார்.

அத்துடன், ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர்.

அதில், “தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, அதன் மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

அத்துடன், “அதிமுக வுக்கு பொது மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில், காவல் துறையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது” என்றும், அவர்ககள் குறிப்பிட்டு உள்ளனர்.

“மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருந்து நீதிமன்றத்திலே வழக்கை எதிர்நோக்கியிருக்கும் திமுக அமைச்சர்கள், அதனை திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுக்களை புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது” என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், “தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று? என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் திறானியில்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற திமுக அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது” என்றும், கவலைத் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, “அதிமுகவை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்றம், வரலாறு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியும் என்றும், அதிமுக இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப் பெற்ற இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்” என்றும், அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதனால், “காழ்ப்புணர்ச்சியோடு காவல் துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது ஏவி விட்டு, அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும், அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். 

அதே போல், “முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, மு.க. ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” என்றும், அவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.