தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் ராஜேந்திரன். இவரை மொட்ட ராஜேந்திரன் என ரசிகர்கள் அன்போடு அழைப்பதுண்டு. ஆரம்பகாலத்தில் ஸ்டண்ட் கலைஞராக இருந்து அதன்பின் பாலாவின் பிதாமகன் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில் தனது திரையுலக வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தை ஈர்த்து வருகிறது. 

அந்த வீடியோவில் அவர் பேசுகையில், என் பெயர் ராஜேந்திரன். ஆனால் எல்லோரும் என்னை மொட்டை ராஜேந்திரன் என அன்பாக அழைக்கிறார்கள். என்னுடைய வரலாறு என்னவென்றால் என்னுடைய அப்பா பைட்டராக இருந்தார். என்னுடைய அண்ணனும் பைட்டராக இருந்தார். சின்ன அண்ணனும் அதே பணியில் தான் இருந்தார். அவர்களை பின் பற்றி நானும் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பைட்டர் ஆக நடித்திருக்கிறேன். கடைசியாக பிதாமகன் என்ற படத்தில் பாலா சார் உடன் பணியாற்றும் போது அவர் உடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. 

அவர் என்னை நடிக்க வைத்தது பற்றி நான் சந்தோஷப்பட்டேன். அதன் பிறகு நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். அவர் அப்படி சொன்னதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது, பயமாகவும் இருந்தது. காரணம் நான் இதுவரை பைட்டராக மட்டுமே இருந்திருக்கிறேன். வில்லனாக நடித்ததில்லை. ஆனால் அவர் தான் நம்பிக்கை கொடுத்து நீ பண்ணு நான் பார்த்துக்கிறேன் என்ன சொன்னார். அதிலிருந்து தான் நான் நடிக்க ஆரம்பித்தேன்.

அந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. என் பெயர் எல்லோருக்கும் தெரியும் அளவுக்கு ஆக்கியது அந்த படம் தான். ரொம்ப சந்தோஷப்பட்டேன், என்னுடைய முதல் குரு, முதல் தெய்வம் பாலா சார் தான். அதன்பிறகு நான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிக்கும் போது ராஜேஷ் சார் எனக்கு காமெடி கலந்த கதாபாத்திரம் கொடுத்தார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 

இப்படி சீரியஸாக ஆரம்பித்து காமெடியாக என்னுடைய கேரியர் போய்க் கொண்டிருக்கிறது. காமெடி கலந்த கேரக்டர் என்னை மொட்டை ராஜேந்திரன் என அன்போடு கூப்பிடும் அளவுக்கு வளர வைத்திருக்கிறது. எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் என மொட்டை ராஜேந்திரன் இந்த வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். 

மொட்ட ராஜேந்திரனின் நடிப்பில் சமீபத்தில் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கிறார். ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.