தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை. இருந்தபோதிலும், ஒரே போல சமமாக இருக்கிறது. 5800 என்கிற அளவிலேயே நீடிக்கிறது. உயிரிழப்பும் தொடர்ந்து 100ஐ தாண்டியே உள்ளது.. தமிழகத்தில் தினசரி பரிசோதனைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 53 ஆயிரத்து 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கெனவே சிகிச்சை பெற்றவர்களில், இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது.

நோயாளிகள் எண்ணிக்கை சமமாக இருப்பது ஆறுதலான விஷயம் என பார்க்கப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை உயர்வது, ஆபத்தாக பார்க்கப்படுகிறது. இது, தமிழகம் மற்றும் இந்தியாவின் இறப்பு விகிதத்தை அதிகரிக்குமோ என்ற பயம், மருத்துவ வல்லுநர்களிடையே நிலவிவருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று மதியம் செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார். அப்படி அவர் பேசும்போது,

``நாட்டிலேயே அதிக பிளாஸ்மா வங்கிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது" என பெருமிதம் பட்டிருக்கிறார்.

இதுபற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று, கொரோனாவில் இருந்து மீண்ட 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் அளித்தனர். 

இந்த நிகழ்வில் பங்கேற்ற பிறகுதான் செய்தியாளர்களை சந்தித்தார்  அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் பேசும்போது, ``இதுவரை தமிழகத்தில் 76 பேரிடம் இருந்து பிளாஸ்மா தானமாகப் பெறப்பட்டுள்ளது. இன்று சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனர். தமிழகத்தில் 76 பேரிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவைக் கொண்டு கரோனா பாதித்து அபாயக்கட்டத்தில் இருந்த 89 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல நாட்டிலேயே பிளாஸ்மா வங்கிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது" என்று கூறியிருக்கிறார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல் பிளாஸ்மா வங்கி தொடக்கி இயங்கி வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 40 காவலர்கள் ஒரே நேரத்தில் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதுவரை 76 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை,மதுரை, நெல்லையில் பிளாஸ்மா வங்கி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.