புரட்சி தளபதி விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க கோரி ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அதனால் சக்ரா படம் ஓடிடியில் வெளியாவதில் பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது. Trident Arts நிறுவனம் விஷாலை வைத்து தயாரித்த ஆக்ஷன் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்த காரணத்தினால் அதிக அளவு நஷ்டம் ஏற்பட்டது என்றும் அதனால் விஷால் தங்களுக்கு 8 கோடி ருபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் அதை தராமல் சக்ரா ரிலீஸ் செய்ய கூடாது என்றும் அந்த நிறுவனம் கேட்டு இருக்கிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரை சக்ரா படத்தினை ஓடிடி-யில் வெளியிட இடைக்கால தடை விதித்து இருக்கிறது. இதனால் விஷால் படத்திற்கு பெரிய சிக்கல் தற்போது எழுந்திருக்கிறது.

ஆக்ஷன் படத்தினை 44 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபிசில் அந்த படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்யவில்லை என்றால் நஷ்டத்தை தான் ஏற்றுக் கொள்வதாக விஷால் கூறி இருந்தாராம். ஆனால் ஆக்ஷன் படம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் மிக மோசமான வசூல் மட்டுமே பெற்றது. அதனால் நஷ்டம் ஆன தொகை 8 கோடி ரூபாயை விஷால் நஷ்ட ஈடாக வழங்க வேண்டி இருக்கிறது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ஆக்ஷன் படத்திற்கு பிறகு அதே நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து நஷ்டத்தை ஈடுகட்ட விஷால் ஒப்பந்தம் போட்டிருந்தாராம். அதற்காக எம்எஸ் அனந்தன் என்ற இயக்குனர் கதை கூறியதாகவும் தெரிகிறது. ஆனால் அதற்கு பிறகு எம்எஸ் அனந்தன் மற்றும் விஷால் இருவரும் இணைந்து வேறொரு தயாரிப்பாளர் உடன் சக்ரா படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் தான் நஷ்ட ஈடு பணத்தை செட்டில் செய்யாமல் விஷால் சக்ராவை ஓடிடியில் வெளியிட கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி விஷால் மாற்று டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். கடந்த 23ம் தேதி முதலில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷால் மற்றும் இயக்குனர் எம்எஸ் அனந்தன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டும் என்பதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சக்ரா படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதன் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. திருடப்படும் ஒரு மெடலை தேடி விஷால் செல்வது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக உள்ளது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால்.