சிபிஎஸ்இ 10 & 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 28 வரை தேர்வு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. இந்த தேர்வை குறிப்பிட்ட சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1,50,198 பேரும் 12-ம் வகுப்பில் 87,651 பேரும் இந்தப் பிரிவில் இருந்தனர். இவர்களுக்கான தேர்வுகள் செப்.22 முதல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

இந்நிலையில் மறுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூபேஷ் குமார், மறுதேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் விளக்கம் அளித்தார். மேலும் கடந்த ஆண்டு 575 மையங்களில் தேர்வு நடைபெற்றதாவும், இந்த முறை 1278 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு வகுப்பறையில் 12 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த வாதத்தை கேட்ட கான்வில்கர் தலைமையிலான நீதிபதிகள், மறுதேர்வு நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 28 வரை தேர்வு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மறுதேர்வை 1.5 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பு மறுதேர்வை 87 ஆயிரம் மாணவர்களும் எழுத உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் சானிடைசரையும், உள்ளே இருப்பது தெளிவாகத் தெரியும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வை 2.38 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் மாணவர்கள் 10-ம் வகுப்பில் 91.46 சதவீதத் தேர்ச்சியும் 12-ம் வகுப்பில் 88.78% தேர்ச்சியும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மறுதேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் செப்.22-ம் தேதி முதல் 2.38 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ம் தேதி தொடங்கப்படும் என்று சிஐஎஸ்சிஇ (இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், கம்பார்ட்மெண்ட் எக்ஸாம் எனப்படும் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் மாணவர்கள் 10-ம் வகுப்பில் 99.34 சதவீதத் தேர்ச்சியும் 12-ம் வகுப்பில் 96.84% தேர்ச்சியும் பெற்றனர்.

இதில் கம்பார்ட்மெண்ட் பகுதியில் இருப்பவர்களுக்கான தேர்வுகள் அக்.6-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது. அக்.6 முதல் 9-ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் அக்.17-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10-ம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை.இதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் செப்.22-ல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.