கன்னட திரையுலகை ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎஃப். கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் யஷ் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது.

கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் (2022) வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி. மலையாளம் என பல மொழிகளில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேஜிஎஃப் சாப்டர் திரைப்படத்தை மொழிகளை கடந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸில் சாதனைகள் படைத்து வரும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் 1100 கோடி வசூலை கடந்து வெற்றி தொடர்ந்து நடைபோடுகிறது. கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தின் இறுதியில் சாப்டர் 3-க்கான அறிவிப்பும் வெளியானது. எனவே கேஜிஎஃப் சாப்டர் 3 திரைப்படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாக கே ஜி எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS  நிறுவனம் கேஜிஎஃப் சாப்டர் 3 திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ,”கே ஜி எஃப் சாப்டர் 3 திரைப்படத்தின் பணிகள் தற்போது உடனடியாக தொடங்கும் எண்ணத்தில் இல்லை. தொடங்கும் சமயத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடுவோம்” என HOMBALE FILMS நிறுவனத்தின் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.