“திருமணமான பெண்களுக்கு, அவர்களது கணவரின் குடும்பத்தினரால் வன்கொடுமைப் படுத்தப்படுவது இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் தான் அதிகம்” என்று, ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு விசயங்கள் குறித்தும், ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

அதாவது, இந்திய கலாசாரப்படி திருமண பந்தங்களில் மனைவிகள் ஒவ்வொருவரும், தங்களது கணவன் வீட்டில் தான் வசித்து வருகின்றனர். ஆனாலும், சில திருமண பந்தங்கள் சில நேரங்களில் தோல்வியில் முடிவதுண்டு.

இந்த திருமண தோல்விக்கு முக்கிய காரணம், “வரதட்சணை கொடுமை, மாமனார் - மாமியார் மற்றும் கணவனின் குடும்பத்தினரின் கொடுமை, கணவரின் கொடுமை என இப்படியாக பல பிரச்சினைகளால், இந்த திருமண பந்தங்கள் பாதியிலேயே தோல்வியில் முடிந்திருக்கிறது” என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இப்படியான கொடுமைகளால் அதிக அளவில் பாதிக்கப்படுவது கணவன் வீட்டில் வந்து வாழும் மனைவிகள் தான். இப்படியான கொடுமைகளால் ஒரு சில பெண்களே, முறையாக விவாகரத்து பெற்றுக்கொண்டு மறுமணம் செய்துக்கொண்டு வாழ்கிறார்கள். 

ஆனால், “பல பெண்கள் கணவனின் குடும்பத்தினர் தரும் பிரச்சனைகளால் அவ்வளவையும் சகித்துக் கொண்டும், இப்படியான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள்” என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் தான், பெண்களுக்கு அதிக கொடுமைகள் மற்றும் தொல்லைகள் கொடுப்பது குறித்து தேசிய குடும்ப நலத்துறை சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 

இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. அந்த ஆய்வில், “இந்திய அளவில் பெண்களுக்கு அதிக கொடுமைகள் மற்றும் தொல்லைகள் கொடுப்பதில் கர்நாடக மாநிலம் தான் முதலிடத்தை பிடித்து இருப்பது” தெரிய வந்திருக்கிறது.

பெண்களுக்கு அதிக கொடுமைகள் மற்றும் தொல்லைகள் கொடுப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், “கர்நாடக மாநிலத்திற்கு எதிராக 48 சதவீதம் பேர், ஆம்” என்று, கருத்து தெரிவித்து உள்ளனர். 

கர்நாடகாவிற்கு அடுத்தப்படியாக, இந்தியாவிலேயே பீகார் மாநிலம் 2 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. பீகார் மாநிலத்திற்கு எதிராக 43 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்கு பிறகு, எந்தெந்த வகைகளில் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது குறித்தும், தேசிய குடும்ப நலத்துறை ஒரு தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

அதில், “பெண்களை மனதளவிலும், உடல் அளவிலும், பாலியல் ரீதியாகவும் அதிக அளவில் தொல்லைகள் மற்றும் கொடுமைகள் கொடுப்பது கணவர்கள் தான்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவை தவிர, “சில கணவர்கள் வெளியுலகிற்கு நல்லவர்களாக இருந்தாலும், மனைவிகளிடம் மட்டும் சைக்கோ போல் நடந்துக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் வீட்டில் தங்களது மனைவிகளை கொடுமைப்படுத்துவதும் உண்டு” என்று கூறப்படுகிறது. 

மேலும், “மனைவிகளின் நடத்தை மீதே சந்தேகம் அடைந்து சிலர் தங்களது மனைவிகளை கடுமையாக விமர்சித்தும் தொல்லை கொடுப்பதும் உண்டு” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “குடும்ப சண்டையை காரணம் காட்டி, பெண்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து உள்ளது. அதே போல், காயம் அடையும் பெண்களை கணவரோ, அவரது குடும்பத்தினரோ காப்பாற்ற முன்வருவதும் இல்லை” என்கிற வேதனையான தகவலும், இதில் கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “கணவன்மார்கள், அவர்களது மனைவிகளை கண் பகுதியில் தாக்குவதும், கை மற்றும் கால்களை முறிப்பதும், கொடூரமாக தாக்குவதும் அதிகரித்து இருக்கிறது என்றும், பெண்கள் மீது தீ வைக்கும் சம்பவங்களும் கணிசமாக உயர்ந்து உள்ளதாகவும்” இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இப்படியான கொடுமைகளால், “58 சதவீத பெண்கள், இந்த பிரச்சினைகளை சகித்துக் கொள்ள முடியாமல் தங்கள் பெற்றோர் வீடுகளுக்கு சென்று, அங்கேயே வசித்து வருகிறார்கள்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இப்படியாக பாதிக்கப்படும் பெண்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பெண்களே, காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு சென்று புகார் அளிப்பதும்” இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.