தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 25-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நவம்பர் மாதம் முழுவதும் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக குறைவான அளவில் மழை பெய்து வந்தது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில்,  தமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியதாவது,  “தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

WEATHER REPORT CHENNAI RAIN

நாளை 3-ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவரும் 4ம் தேதி: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 5-ம் தேதி: நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்தி வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கரையை வரும் 4ம் தேதி காலை நெருங்கக்கூடும்.

WETHER REPORT CHENNAI RAIN

இன்று 2-ம் தேதி: தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை 3-ம் தேதி: மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 4-ம் தேதி: மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.