கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் உலகத்தையே உலுக்கி வருகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் தினசரி கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். எத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டாலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியானவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில்  ஒருபுறம் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல்  பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு வெளியில் ஆம்புலன்ஸ் வண்டிகளில் வரிசையாக நிற்பது மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது. 

மறுபுறம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் இல்லாததால்  ஆக்சிஜன் தயாரிப்பு ஆக்சிஜன் இறக்குமதி என பல வழிகளில் மத்திய அரசும் மாநில அரசும் இரவு பகலாக உழைத்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புது உச்சத்தை தொட்டு அதிகமாகிக் கொண்டே வருவதால் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்  கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை அடுத்து பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடிகர் கார்த்தியின் குடும்பம், நேற்று நடிகர் அஜீத் குமார், இயக்குனர் A.R.முருகதாஸ் எனப்பலரும் உதவி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் சிறந்த பாடல் ஆசிரியர்களில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது  பங்களிப்பாக 5 லட்ச ரூபாயை முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள், 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5லட்சம் வழங்கினேன்.மனம்விட்டு உரையாடினோம். 

முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார்;

நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார்; செயல் குறித்தே திட்டமிடுகிறார்;

நாடுகாக்கத் துடிக்கும்நல்லவரை வாழ்த்தினேன்.

என தெரிவித்துள்ளார்

மேலும் பல திரை பிரபலங்களும் பொதுமக்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ள நிலையில் அடுத்ததாக ஆக்சிஜன்  தயாரிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலரும் கொடுக்கப்படும் இந்த நிதி உதவிகள் கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவுவதால் நிதி உதவி கொடுத்த அனைவரையும் சமூக வலைதளங்களில் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.