மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதியை படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்கில் கர்ணன் வெளியாகும் என அறிவித்தது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் நாளை 8 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ணன் திரைப்படத்தை அடுத்து பாலிவுட்டில் அக்‌ஷய்குமாருடன் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார். அத்திரைப்படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்து போயஸ் கார்டனில் தான் கட்ட இருக்கும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையை முடித்து ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

2020-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட ஜகமே தந்திரம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இதனிடையே ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் இன்னும் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.