தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர் பட்டியலில் ஒருவர் பா ரஞ்சித். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கினார். தற்போது ஆர்யா வைத்து சல்பேட்டா படத்தை இயக்கிவருகிறார். 

வடசென்னை பகுதியில் பாக்ஸிங் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஆர்யாவின் ஜிம்  ஒர்க்-அவுட் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த படத்தில் கலையரசன், தினேஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இயக்குனராக மட்டுமன்றி பரியேறும் பெருமாள், குண்டு உள்ளிட்ட படங்களையும் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் பா.இரஞ்சித். அடுத்ததாகப் படம் தயாரிப்பதற்குக் கதைகளும் கேட்டு வருகிறார். இதனிடையே, கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள குதிரைவால் படத்தை வெளியிடுகிறார் பா.இரஞ்சித். 

வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். படத்தின் கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகவும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கலையரசனுக்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் என்றே கூறலாம். லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்திருந்தார். ஷாந்தனு, மேகா ஆகாஷ் நடித்த இந்த பாடல் ஆல்பம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கலையரசன். எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் ரிலீஸையும் எதிர்பார்க்கலாம்.