விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற பிரபல நடன இயக்குனர் சாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திரையுலகில் நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.3:33 என்ற புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்க சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

பேம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள 3:33 திரைப்படத்தில் நடிகர்கள் சரவணன், ரமா, ரேஷ்மா பசுபுலேட்டி, மைம் கோபி, ஸ்ருதி செல்வம் ஆகியோர் நடித்துள்ளனர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேரத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பல அமானுஷ்ய விஷயங்களை மையமாக வைத்து ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள 3:33 திரைப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர் A.R.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த சாண்டி மாஸ்டரை கதாநாயகனாக பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள படத்தின் இந்த சுவாரசியமான டீசர் மேலும் எதிர்ப்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது.  

விரைவில் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிக் பாஸ் சாண்டி இணைந்து நடித்திருக்கும் 3:33 திரைப்படத்தின் இந்த சுவாரசியமான டீஸர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.