பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி அதன்பின் கடந்த 1993 ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகாமானவர் இயக்குனர் ஷங்கர். கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜுன், மதுபாலா, கவுண்ட மணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் தமிழ் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது.
அட்டகாசமான திரைக்கதை, அடுத்தடுத்து கதையில் வரும் திருப்பங்கள், படத்தின் இறுதி வரை குறையாத சுவாரசியம் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த ஜென்டில்மேன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூலை அள்ளிய படமாக ஜென்டில்மேன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஷங்கர் அதனை தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் குவித்து வியக்க வைத்த திரைபடங்களில் பெரும் பங்கு வகித்தவர் இயக்குனர் ஷங்கர் அதன்படி அவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் வெளியான சிவாஜி, எந்திரன். எந்திரன் 2.0 ஆகிய திரைப்படங்கள் ஜனரஞ்சகமான விமர்சனத்தை தாண்டி பல பிரம்மாண்டங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தது.
அதே போல் உலகநாயகன் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படம் தொடாத வசூல் இல்லை. மூன்றாவது திரைப்படமே உலகநாயகன் கமல் ஹாசனுடன் என்பது குறிப்பிடதக்கது.இன்றும் இந்தியன் திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் தனி செல்வாக்கு இருந்து வருகிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமல்ல அறிமுக நாயகர்களை வைத்தும் இயக்குனர் ஷங்கர் வெற்றியை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். அதன்படி வெளியான காதலன், பாய்ஸ் திரைப்படங்கள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்களுக்கு இந்தியா நாடு முழுவதும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. துணை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் இன்று இந்திய சினிமாவின் பெருமை மிகு இயக்குனராகவும் 13 திரைப்படங்களை இயக்கி தோல்வியையே சந்திக்காத இயக்குனர் என்ற புகழை கொண்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இயக்குனராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அழுத்தமான முக்கியமான திரைப்படங்களை தயாரித்தும் பெயர் பெற்றுள்ளார் அதன்படி இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல்வன், காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305 ல் கடவுள், ஈரம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் லைகா தயாரிப்பில் ‘இந்தியன் 2’ என்ற படத்தையும் தெலுங்கு மற்றும் தமிழில் ராம்சண் நடித்து வரும் ‘கேம் செஞ்சர்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
புது புது முயற்சிகள் மூலம் தொழில் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை இயக்குனர் ஷங்கர் பெற்று தருவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் தரத்தை படத்திற்கு படம் உயர்த்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். சினிமாவில் அவருடைய 30 ஆண்டுகளை நிறைவை அவரது ரசிகர்களும் சக திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.