மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் உலகளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் அறிமுகமானவர், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் நடிகை நஸ்ரியாவை 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

கடந்த ஆண்டு ஃபஹத் பாசில் நடிப்பில் ட்ரான்ஸ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து ட்ரெண்ட் செட்டராக மாறியுள்ளார். ஃபஹத் பாசில் நடிப்பில் சென்ற லாக்டவுனில் வெளியான படம் சி யு சூன். 

மகேஷ் நாராயண் இயக்கியிருந்த இப்படத்தில் ரோஷன் மேத்யூஸ், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஊரடங்கு காலகட்டத்தில் முழுக்க முழுக்க செல்போனில் படமாக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 1-ம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இப்படத்தை ஃபஹத் பாசிலே தயாரித்தும் இருந்தார். 

தற்போது ஃபஹத் பாசில் நடிப்பில் மாலிக் எனும் க்ரைம் ட்ராமா திரைப்படம் உருவாகியுள்ளது. மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கவிருக்கும் பாட்டு எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார். பிரேமம் வெற்றிக்கு பின் 5 ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தின் அறிவிப்பை சமீபத்தில் கூறியிருந்தார் அல்போன்ஸ். 

இந்நிலையில் ஃபஹத் ஃபாசில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். பல கோடி மதிப்புள்ள போர்ஷ் எனும் காரை அவர் வாங்கியுள்ளார். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த காருடன், ஃபஹத் மற்றும் நஸ்ரியா ஜோடியாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. 

திரைப்பிரபலங்கள் ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வைத்திருப்பது ட்ரெண்டாகிவிட்டது. பிரபலங்களின் காரை வைத்தே ரசிகர்கள் கார் மாடலை தெரிந்து கொள்கிறார்கள். பைக் மற்றும் கார் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் திரைப்பிரபலங்கள் பட்டியலில் தற்போது ஃபகத் மற்றும் நஸ்ரியா இணைந்துள்ளனர். எந்த காராக வேண்டுமானாலும் இருக்கட்டும், வேகமாக ஓட்டாமல் பொறுமையாக செல்லுங்கள் என்று அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.