துல்கர் சல்மானின் அதிரடி கேங்ஸ்டர் படமான கிங் ஆஃப் கொத்தா பட புது ட்ரீட்... ரசிகர்களை ஈர்த்த என் உயிரே பாடல் இதோ!

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா படத்தின் என் உயிரே பாடல் வெளியீடு,dulquer salmaan in king of kotha movie second single en uyire out now | Galatta

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக வரவிருக்கும் கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக என் உயிரே என்ற பாடல் தற்போது வெளியானது. மலையாளத்தில் நடிகராக களமிறங்கி தற்போது இந்திய சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்த முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் துல்கர் சல்மான், முன்னதாக கடந்த 2022ம் வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப் - ரிவெஞ் ஆப் தி ஆர்டிஸ்ட் வரிசையாக நான்கு வெவ்வேறு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. திரைப்படங்களைத் தாண்டி முதல்முறையாக வெப் சீரிஸிலும் களமிறங்கிய துல்கர் சல்மான், ஃபேமிலி மேன் & ஃபர்சி வெப் சீரிஸ்களின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிசிலும் முன்னணி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். ஹிந்தியில் தயாராகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நெட்ஃபிலிக்ஸில்  தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அடுத்ததாக தனுஷின் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகும் லக்கி பாஸ்கர் எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. தனது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் 1980களில் நடைபெறும் கதைக்களத்தில் அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிங் ஆப் கொத்தா படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கிங் ஆஃப் கொத்தா படத்தில் நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கிறது. 

கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்க, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை ரிலீசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக என் உயிரே என்ற பாடல் வெளியானது. அசத்தலான அந்த பாடல் இதோ…