தமிழ் திரையுலகில் பன்முகத்திறன் கொண்டவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குநர் என அவதாரம் எடுத்து வருகிறார். தமிழ் திரைப்படங்களைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களிலும் கால் பதித்துள்ளார்.

2019-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. தற்போது தனுஷின் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன. அதைத்தொடர்ந்து ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் சகோதரியும் மருத்துவருமான கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2003-ம் ஆண்டு எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், தனுஷ் ரசிகர் ஒருவர் அனுப்பிய இந்த புகைப்படம் பழைய நினைவுகளை வரவழைத்துள்ளது. அதற்காக தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி. இந்த போட்டோ 2003-ம் ஆண்டு எடுத்தது. அப்போது தனுஷ் எவ்வளவு இளமையாக அப்பாவியாக இருக்கிறார் என்பதை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றார் நடிகர் தனுஷ். அமெரிக்காவில் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் தான் தனுஷ் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. 

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடிக்கவுள்ளார். தனுஷ் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கி வந்த D43 படத்தில் நடித்து வந்தார்.