தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ் சினிமாவிற்கு மிக முக்கிய படைப்புகளை தயாரித்து வருகிறது. தளபதி விஜயின் குருவி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தயாரிப்பு பயணத்தை தொடங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து சூர்யாவின் ஆதவன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா, உலக நாயகன் கமல்ஹாசனின் மன்மதன் அம்பு, ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவு, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறை கதாநாயகனாக களமிறங்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தது. கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து ஆக்சன் திரில்லர் படமாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த கலகத் தலைவன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது.
அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படமாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு இணைந்து ஃபகத் பாசில், வைகைப்புயல் வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல தயாரிப்பு நிறுவனமாக மட்டுமல்லாமல் தரமான திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டில், FIR, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட் காத்து வாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி, குலுகுலு, திருச்சிற்றம்பலம், டைரி, கோப்ரா, கேப்டன், வெந்து தணிந்தது காடு, சர்தார், கட்டா குஸ்தி, லவ் டுடே, செம்பி ஆகிய திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கமே பிளாக்பஸ்டர் ஹிட்டாக அஜித்குமாரின் துணிவு படத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாகரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்த டாடா திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின் உடன் இணைந்து நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் டாடா திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவில், கதிரேஸ் அழகேசன் படத்துக்கு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான நல்ல ஃபீல் குட் திரைப்படமாக டாடா திரைப்படம் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் டாடா திரைப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக க்ளேச காதலா எனும் வீடியோ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோ பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த க்ளேச காதலா வீடியோ பாடல் இதோ…