ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல்களை படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களிடம்,” சமீப காலமாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான இசை வெளியீட்டு விழாக்கள் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் நடிகர் தனுஷின் இசை வெளியீட்டு விழாவும் அப்படி நடைபெற வாய்ப்பு இருக்கிறதா?” என கேட்டபோது, “இது தயாரிப்பு நிறுவனத்தின் முடிவுதான் நடிகர் தனுஷும் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் எனவே இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடமும் பெரிதாக தான் இருக்கும்!” என பதில் அளித்து இருக்கிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இந்த பதிலால் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இது குறித்து அறிவிப்புகள் மிக விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
மேலும் அவரிடம் “கேப்டன் மில்லர் படம் என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும்?” என கேட்டபோது, "ஒரு அடிப்படையான சுதந்திரத்திற்கான போராட்டத்தை மையப்படுத்தி ஒரு படமாக தான் இருக்கும்” என இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த நடிகராக தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நிறுத்தி வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது திரைப்படமாக உருவாகும் D50 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் D51 படத்தில் அடுத்து தனுஷ் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் தனுஷ் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.