விலங்கு வெப்சீரிஸை தொடர்ந்து விமலின் அடுத்த அதிரடி படைப்பு... கவனம் ஈர்க்கும் துடிக்கும் கரங்கள் பட ட்ரெய்லர் இதோ!

விமலின் துடிக்கும் கரங்கள் பட ட்ரெய்லர் வெளியீடு,actor vemal in thudikkum karangal movie trailer out now | Galatta

இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரைப்படமான துடிக்கும் கரங்கள் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியானது. தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். தன் திரை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த விமல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் முதல் முறை கதையின் நாயகனாக விமல் நடித்த களவாணி திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி சூப்பர் ஹிட் ஆனது. களவாணி திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்த நடிகர் விமல் தொடர்ந்து நடித்த தூங்கா நகரம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் மீண்டும் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த வாகை சூடவா திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் பக்கா காமெடி படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான கலகலப்பு படத்தில் கதாநாயகனாக நடித்த விமல் அடுத்தடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற தவறிய நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளிவந்த விலங்கு வெப் சீரிஸ் பெரிய வெற்றி பெற்றது. இந்த விலங்கு வெப் சீரீயஸின் வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் தற்போது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டில் விமல் நடிப்பில் இதுவரை தெய்வ மச்சான் மற்றும் குலசாமி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. மேலும் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை மற்றும் லக்கி ஆகிய திரைப்படங்கள் விமல் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே விமல் நடிப்பில் அடுத்த அதிரடி படைப்பாக வெளிவர இருக்கிறது துடிக்கும் கரங்கள் திரைப்படம். இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த துடிக்கும் கரங்கள் திரைப்படத்தை தயாரிப்பாளர் கே.அண்ணாதுரை அவர்கள் ஒடியான் டாக்கீஸ் சார்பில் தயாரிக்க, வேலு தாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். விமல் உடன் இணைந்து மிஷா நரங் கதாநாயகியாக நடித்திருக்கும் துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் சதீஷ் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்மி ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்யும் துடிக்கும் கரங்கள் திரைப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கிறார்.வருகிற செப்டம்பர் 1ம் தேதி துடிக்கும் கரங்கள் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது துடிக்கும் கரங்கள் திரைப்படத்தின் ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். விலங்கு வெப்சீரிஸை தொடர்ந்து நடிகர் விமலின் அடுத்த அதிரடி படைப்பாக வர இருக்கும் துடிக்கும் கரங்கள் படத்தின் அந்த ட்ரெய்லர் இதோ…