கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவிகித இருக்கையோடு  இயங்கி வந்த காலகட்டத்தில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து திரையரங்குகளை ரசிகர்களால் நிறைத்துக் கொண்டாட வைத்த திரைப்படங்களில் ஒன்று நடிகர் சிலம்பரசன்.TR நடித்த “ஈஸ்வரன்” திரைப்படம். 

மாதவ் மீடியா டி கம்பெனி பாலாஜி கப்பா தயாரிப்பில் உருவான  ஈஸ்வரன் திரைப்படத்தை  இயக்குனர் சுசீந்திரன் இயக்கினார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான “திரு” ஒளிப்பதிவு செய்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் S.தமன் இசையமைத்திருந்தார். S.தமன் இசையில் திரைப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் தற்போது YouTube-ல் புதிய சாதனை புரிந்துள்ளது. இசையமைப்பாளர் S.தமனின் துள்ளலான இசையில் நடிகர் சிலம்பரசனின் துடிப்பான நடன அசைவில் வெளிவந்த இந்தப் பாடலின் வீடியோ YouTube-ல் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 100 மில்லியன் முறை பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. 

பாடலாசிரியர் யுகபாரதி வரிகளுக்கு நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து பாடகி ரோஷினி இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும்  நடிகர் சிலம்பரசன் பாடும் பாடல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் தன்னுடைய திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடி அதற்கு ஏற்ற சிறப்பான நடனத்துடன் வெளிவந்த மாங்கல்யம்  பாடல்  இன்னும் பல மில்லியன் சாதனைகளை படைக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.