சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியான PSBB  பள்ளியில்  ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதோடு வாட்ஸ் அப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத ஆசிரியர் ராஜகோபாலன்  சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகோபாலன் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோல பலமுறை நடந்து கொண்டுள்ளார் என 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

 சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவில் 96, மாஸ்டர், கர்ணன் போன்ற திரைப்படங்களில் நடித்த கௌரி கிஷன் தன் பள்ளிப் பருவத்தில் நடந்த மோசமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

"மாணவிகளுக்கு பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கொடுமைகள் ஒன்றும் புதிதல்ல நான்  அடையாறு ஹிந்து சீனியர் மேல்நிலைப் பள்ளி (HSS-School ,Adayar) படிக்கும் பொழுது  நானும் இது போன்ற சம்பவங்களை எதிர் கொண்டுள்ளேன். பொதுவாக நாம் பள்ளிப் பருவங்களின் நினைவுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது  அது மிகுந்த மகிழ்ச்சியை தரும் ஆனால் PSBB போன்ற சம்பவங்களை சந்தித்த என்னைப் போன்ற பலருக்கும் அது கசப்பான அனுபவங்களாகவே இருக்கிறது. இதுபோன்ற கொடுமைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைத்தே தீர வேண்டும்."

"நான் படித்த ஹிந்து சீனியர் மேல்நிலை பள்ளியில்  படித்தவர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை பற்றி பேச முன்வர வேண்டும். மேலும் இதுபோன்ற கொடுமைகளை சந்தித்த அனைவரும் இதுபற்றிய உண்மைகளை உடைக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் இதுபோன்ற கசப்பான அனுபவங்களை எனக்கு ஏற்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. நீண்ட நாட்களாக என் நெஞ்சில் இருந்த பாரத்தை தற்போது கொஞ்சம் இறக்கி வைத்திருக்கிறேன். மற்றவரும்  அவரவர்க்கு ஏற்பட்ட கொடுமைகள் பற்றிப் பேசுவதன் மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் .பாடகி சின்மயி மற்றும் கிஷன் தாஸ் போன்றவர்கள் இந்தப் பிரச்சினை குறித்து முன்னெடுத்து பேச வேண்டும்"

என பதிவு செய்துள்ளார்.