நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது.

இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. 

இந்நிலையில் நடிகர் கருணாஸுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருணாஸுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்த பிறகு அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் செக்யூரிட்டியாக பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என தெரிய வந்ததால் நடிகர் கருணாஸுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமை படுத்திக் கொண்டிருக்கிறார்.

பாப் இசை பாடல்கள் பாடுவதில் வல்லவரான கருணாஸ், பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் மூலம் புகழ் பெற்ற அவர் பிதாமகன், வசூல் ராஜா, பாபா, பொல்லாதவன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பின் விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி சில மாவட்டங்களில் வெளியிட்டு இருக்கிறார் கருணாஸ். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி என்ற படத்தை எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

அரசியலில் களமிறங்கிய கருணாஸ்  தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாஸின் மகன் கென், தனுஷின் அசுரன் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். கருணாஸின் மனைவியும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 

கொரோனாவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலம் அடைந்துவிட்டார். நடிகர் விஷால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்று திரும்பிவிட்டதாக கூறி இருந்தார்.

மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார். இன்று காலை பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார். தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.