கொரோனா பாதிப்பானது, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே போவதையொட்டி தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் சிலவற்றுக்கு, கொரோனாவுக்கான சிகிச்சையளிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளுக்கென, கட்டணத்தை அரசே நிர்ணயமும் செய்தது. இந்நிலையில், `கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை பாயும்' என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்திருந்தார். 

இதுபற்றி இருதினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில், நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதியானபிள்ளையார் பாளையத்தில் நோய்த் தடுப்புப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொரோனாவை தடுப்பது குறித்து விளக்கி கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ``கொரோனா சிகிச்சை தொடர்பாக அரசு ஆணையை பின்பற்றி பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். கொரோனவைரஸ் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தகைய மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, நோயாளிகளிடம் அதிகமாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அரசு மருத்துவமனைகளப் பொறுத்தவரை அனைத்து உயர்தர மருந்துகள் தற்போது கையிருப்பு உள்ளன. தனியார் மருத்துவமனையில் உயிர் காக்கும் உயர் தர மருந்துகள் ஏஜெண்டுகள் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். 

மேலும் பல இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கள்ளத்தனமாக மருந்து கொண்டுவந்து விற்பது குறித்து அறிந்து பிரத்யேகமாக 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் ஈரோடு, மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக மருந்து விற்பனை செய்த ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு உயர் தர மருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் அரசு மூலமாக அவர்களுக்கு வழங்குவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் நேற்றும் உயர்ந்தே காணப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இது வரையிலான மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உள்ளது. இவர்களில், நேற்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5,035 பேரும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 28 பேரும் அடங்குவார்கள். சென்னையில் மட்டும் செவ்வாய்க் கிழமையான நேற்று 1,023 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவில் நேற்று மேலும் 108 பேர் பலியாகியுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை தமிழகத்தில் 4349 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 6501 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,08784 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவர்கள் வீதம் 77.80% சதவீதமாக உள்ளது. 

இதற்கிடையில் இன்றைய தினம் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களிடம் மீண்டும் பேசியிருந்தார் ராதாகிருஷ்ணன். அப்படி அவர் பேசும்போது, ``அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் தொகையை வசூலித்த குற்றத்துக்காக, இதுவரை ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

உள்மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே கொரோனா அதிகமாகி வருவதால், அங்கெல்லாம் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் அவர். மாஸ்க் அணிவதன் மூலம், 90 % தொற்றை தவிர்க்கலாம் என்பதால், மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணியும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார் அவர். இத்துடன், தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணி எவ்வாறு நடக்கிறது என்பதை ஆராய்ந்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். மருத்துவப் பணியாளர்களிடம், பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவசத்தின் அவசியத்தை உணர்த்திய ராதாகிருஷ்ணன், அவற்றை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி என்பது குறித்தும் அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பாக பிபிஇ-க்களை அப்புறப்படுத்தாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் உள்ளார்.