“ஆதரவற்றோருக்குப் பணம் வசூலிப்பதாக” கூறி, மோசடியில் ஈடுபடுவதாக எழுந்த புகாரையடுத்து, யூடியூபர் மதனை நேரில் ஆஜராகப் புளியந்தோப்பு சைபர் பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பியதால், அவர் தற்போது தலைமறைவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யூடியூபர் மதன் என்றால், ஆன்லைனில் கேம் விளையாடும் சக போட்டியாளர்களுக்கு நன்றாகத் தெரிந்த முகமாகவே இருப்பார்.

அப்படி, ஆன்லைனில் விளையாடும் போது, தன்னுடன் விளையாடும் சக போட்டியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே கொண்டவர் தான் இந்த யூடியூபர் மதன்.

அத்துடன், தன்னுடன் ஆன்லைனில் விளையாடுவது பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் உச்சத்தில் இருக்கும். 

முக்கியமாக, பெண்களை இழிவுபடுத்தும் கொடூரமான கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாகப் பேசும் மதனுக்கு, பெண்கள் சிலர் தங்களை அவரது ஃபேன் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டு, அவரோடு தொடர்ந்து பேசி வருவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

அப்படி, ஆன்லைனில் விளையாடும் போது, மதனின் ஆபாச பேச்சுகளுக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என குறிப்பிடுவதோடு, என்னிடம் உள்ள பணமும், எனது வழக்கறிஞரும் என்னை காப்பாற்றி விடுவார்கள் என்று, புகழ் போதையில் பேசி, மற்றவர்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் விளையாடும் போது, அவர் கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளார் என்றும், குற்றச்சாட்டப்படுகிறது.
 
இப்படியாக, கடந்த சில மாதங்களாக மதனின் ஆபாச உரையாடல்கள் அடங்கிய வீடியோக்கள், இணையவாசிகள் பலரையும் அவரது யூடியூப் சேனலை பார்க்க வைத்திருக்கிறது. 

அந்த வகையில், “மதன்' யூடியூப் சேனலுக்கு” இது வரை 7 லட்சத்திற்கு அதிகமாகவும், “டாக்ஸிக் மதன் 18+” யூடியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் Subcribers-ம் தற்போது உள்ளனர். 

குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுமி, சிறுவர்கள் மூழ்கி உள்ளனர். அப்படியான சிறுவர் சிறுமிகளை குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தவர்களை, அவர் தன் பக்கம் அதிகமான கவனத்தை ஈர்த்திருக்கிறார். 

இப்படியாக, ஆபாசமான பேச்சுக்கள் மட்டுமின்றி, ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி சக போட்டியாளர்களிடமிருந்து நன்கொடையாகவும் பல லட்சம் வரை பணம் வசூலித்திருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இந்நிலையில், மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் தொடர்பாக இன்று காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மதனுக்குப் புளியந்தோப்பு சைபர் பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மிக முக்கியமாக, “யூடியூபர் மதன், சிறுமிகளை ஏமாற்றிப் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டாரா? என்றும், 18+ சேனல் என்று பதிவிட்டாலும் முறையாக யூட்யூப் நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் ஒளிபரப்பி வருகிறாரா?” என்றும், சிறுவர்கள் பலர் 18 வயதைக் கடக்காமல் வயதை மாற்றி வீடியோ பார்த்து வருவது குறித்தும்” காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், யூடியூபர் மதனின் யூடியூப் பக்கத்தை முடக்க போலீசார் தற்போது முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே, போலீசார் யூடியூபர் மதனுக்கு சம்மன் அனுப்பி உள்ள நிலையில், அவர் தற்போது தலைமறைவாகி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், அவரை தேடிப்பிடித்து கைது செய்யவும் போலீசார் தற்போது முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.