“உலகத் தமிழர்களே.. தமிழக மக்களின் உயிர்காக்க நிதி உதவி தாருங்கள்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கொரோனாவின் 2 வது அலையைத் தமிழ்நாடு உட்பட இந்தியாவே எதிர்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதிலும் தினந்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதே போல், நாடு முழுவதும் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

அத்துடன், கொரோனா நோய் அதிகம் பரவி வருவதால் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடுகளும் நிலவி வருகிறது. 

மேலும், நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. எனினும் நோய் தொற்று குறைந்தபாடு இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதால், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த வாரம் முதல் முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி, தமிழ்நாட்டில் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது.

இவற்றுடன், தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கப் பல நடவடிக்கைகளைத் தமிழக அரசு  எடுத்து வருகிறது. 

அதே போல், தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்தா மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், “கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுப் பேசிய உள்ள வீடியோவில், “கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு நிவாரண தொகை இன்று முதல் வழங்கப்பட உள்ளது” என்றும், குறிப்பிட்டார். 

இந்த நிலையில், “தமிழக அரசுக்கு வெளிநாட்டில் வாழும் சில தமிழர்கள் உதவினார்கள். அவர்களைப் போலவே, அனைத்து மக்கள் உதவ முன்வர வேண்டும்” என்றும், உலக தமிழர்களே தமிழக மக்களின் உயிர்காக்க நிதி உதவி தாருங்கள்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மேலும், “ஈகையும் கருணையும் பரந்த மனமும் கொண்ட தமிழக மக்கள் கொரோனாவுக்கு நிதி வழங்க வேண்டும் என்றும், முதல்வர் நிவாரண நிதிக்கு வரும் பணம், கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே செலவிடப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 

இதனிடையே, “கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், “நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.