சென்னை, போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் இருக்கிறது. சுமார் 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. அவரது மறைவுக்குப் பின்னர் இந்த இல்லத்தில் அவரது தோழி சசிகலா குடியிருந்து வந்தார். அவர் சிறைக்கு சென்ற பின்னர் அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து அந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆனால், அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் வழக்கு தொடுத்தனர். ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவர்கள் இருவர் இருப்பதாகவும், தங்களது பாட்டிக்கும் அந்த சொத்தில் உரிமை இருப்பதால் தங்களுக்கு கோருவதற்கு உரிமை இருக்கிறது என்றும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு இழப்பீடாக ரூ. 67.9 கோடியை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது. மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கியான ரூ. 36.9 கோடியையும் அரசே செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேதா இல்லத்தை கையகப்படுத்த 5.10.2017 அன்று தமிழக வளர்ச்சித்துறை நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அளித்து இருந்தது. இதையடுத்து, நிலம் மற்றும் இல்லத்தைக் கைப்பற்ற பூர்வாங்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. பின்னர் இதற்கான உறுதி ஆவணமும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இல்லம் மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமை செய்வது என்றும், 'வேதா நிலையம்' இல்லத்தை 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' என மாற்றுவதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்து இருந்தார்.

வேதா இல்லத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று ஜெயலலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் தற்போது நடக்கும் செயல்களை வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களது தனி உரிமைகளை எடுத்து அரசுடமை செய்யக் கூடாது. எங்களது பாட்டியின் உரிமையும் இதில் கலந்துள்ளது. ஜெயலலிதா எங்களது குடும்பத்தில் ஒருவர் என்று தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார்

இந்த உத்தரவின்படி, 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் ஜெ.வின் சொந்தக்காரரான தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கெனவே ஜெ.தீபாவும் இப்படியொரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தன்னுடைய அந்த  மனுவில், சொத்துக்கள் மீது உரிமையுள்ள தங்களிடம் கருத்து கேட்காமல் கையகப்படுத்திய நடவடிக்கை என்பது நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு சட்டங்களுக்கு முரணானது என கூறியிருந்தார் தீபா. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ``ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள்" என ஜெ. தீபாவிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.

இதன்பின் தீபக்கின் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில், ஆகஸ்ட் 12-ம் தேதி விசாரணைக்கு வரும் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி இன்று அது விசாரணக்கும் வந்தது.

வழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது என்பது கொள்கை முடிவு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு முன் நடைபெற அமர்வில், நினைவு இல்லமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதற்கு இந்த அமர்வில், தமிழக அரசு பதிலளித்திருந்தது. அந்தப் பதிலில், `இந்த இல்லத்தை, நினைவு இல்லமாக்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதனை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற கோரிக்கைய ஏற்க முடியவில்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.