தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாகவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது கேள்விக்குறிகளோடு இருக்கிறது.

இதற்கிடையில் இன்றைய தினம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு சூழ்நிலைக்கு ஏற்பவே முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

மேலும், பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறினார். 

முன்னதாக, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. மேலும், கரோனா பரவும் சூழ்நிலையால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், கரோனா பரவல் முழுவதுமாக குறைந்தபிறகு பெற்றோர்களின் கருத்துகளை கேட்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இவற்றோடு சேர்த்து, `2013 ம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது. இருப்பினும், இதுகுறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்' என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

தமிழகத்தில், தற்போது அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி பயில வசதியாக, முதல்வர் மூலம் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. பள்ளியில் பாடங்கள் போதிப்பது போல், தனியார் டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. இதுபற்றி அமைச்சரிடம் கேட்டபோது, ``தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் உயர் ரக ஆய்வகம் வசதி துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, க்யூ ஆர் கோடு மூலம் கல்வி கற்கும் முறை, தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறினார். 

இரண்டு தினங்களுக்கு முன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன், ``10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும். ஐடெக் லெப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ``தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த ஏற்படுத்தியிருக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் 95 சதவீத மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான சைகை மொழி மூலமாக பாடத்தைக் கற்றுத் தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார்

புதிய கல்வி கொள்கை குறித்து கேட்டபோது, அதுகுறித்து ஆராய, நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவினரின் கருத்துகளை அறிந்து, என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை அரசு முடிவு செய்யும், என்று கூறியுள்ளார். முன்னதாக முதல்வர் பழனிச்சாமி திண்டுக்கல்லில் வைத்து இருமொழிக் கொள்கைக்கான நிலைப்பாட்டை உறுதிசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.