விழுப்புரம் அருகே லாக்டவுனில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குள் ஒரே மாதத்தில் பிரச்சனை ஏற்பட்டு, கணவனே மனைவிக்கு தீ வைத்த கொலை செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள வானூர் பரங்கனியைச் சேர்ந்த 21 வயதான ஜீவா, அந்த பகுதியில் உள்ள நயினார் பாளையத்தைச் சேர்ந்த 20 வயதான ராஜேஸ்வரி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தன் காதலியைப் பார்க்க முடியாமல், ஜீவா தவித்துப் போனார்.

காதலியைக் காணாமல் ஏங்கித் தவித்த ஜீவா, தன் காதலியின் மனசை மாற்றி, கடந்த ஜூன் 3 ஆம் தேதி ராஜேஸ்வரியை காதல் திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்குப் பிறகு, கணவர் ஜீவா வீட்டிற்கு வாழச் சென்ற ராஜேஸ்வரி, அங்கு ஒரு சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகத் தெரிகிறது. 

திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, ராஜேஸ்வரியிடம் அவர் வீட்டிற்குச் சென்று வரதட்சணை வாங்கி வரச் சொல்லி வற்புறுத்தியதாகத் தெரிகிறது. 

அத்துடன், காதல் திருமணம் செய்துகொண்டதால், ராஜேஸ்வரி வீட்டில் வரதட்சணை எதுவும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. இதனால், தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி சிரமப்பட்ட ஜீவா, மனைவியை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தத் தொடங்கி உள்ளார். ஆனால், “வரதட்சணை வாங்கி வர முடியாது” என்று, ராஜேஸ்வரியை தொடர்ந்து மறுத்து வந்ததால், அவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி திருமணம் ஆன நிலையில், இந்த மாதம் அதே 3 ஆம் தேதி, வரதட்சணை கேட்டு ஜீவா மீண்டும் மனைவியை தாக்கி உள்ளார். அடி வாங்கியும், தன் அம்மா வீட்டிற்குச் சென்று “வரதட்சணை வாங்கி வர முடியாது” என்று ராஜேஸ்வரி விடப்பிடியாக இருந்துள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த கணவர் ஜீவா, மனைவி ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், தீ பற்றி எரிந்த நிலையில், அவர் சத்தம் போட்டுக் கதறித் துடித்துள்ளார். இதனையடுத்து, மனைவி மீது எரிந்த தீயை அணைத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

அப்போது, “நான் தீ வைத்து எரித்ததை வெளியே சொன்னால், உன் சகோதரனையும், உன் தந்தையையும் கொன்று விடுவேன்” என்றும் ஜீவா கடுமையாக மிரட்டி உள்ளார். 
இதனையடுத்து, கடுமையான தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜேஸ்வரி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது, ராஜேஸ்வரியின் பெற்றோரிடம், “ராஜேஸ்வரி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகவும், நான் காப்பாற்ற முயன்றேன்” என்றும், ஜீவா தெரிவித்துள்ளார்.

ராஜேஸ்வரி தற்கொலை தொடர்பாக அங்கு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர். 

அப்போது, “என் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றது என் கணவர் ஜீவா தான்” என்று, ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஜீவாவை கைது செய்த வானூர் போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.