தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்வலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகில் உள்ள வடலிவிளை இந்திரா நகரை சேர்ந்த சேகர் என்பவரன் 7 வயது மகள், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சிறுமி வீட்டில் இருந்து வந்த நிலையில், வரும் கல்வி ஆண்டில் 4 ஆம் வகுப்பு படிக்க இருந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, தன் வீட்டின் அருகிலேயே சிறுமி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அதன் பிறகு, அந்த பகுதியில் உள்ள தனக்குத் தெரிந்தவரின் வீட்டில் டி.வி. பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு, சிறுமி வீடு திரும்ப வில்லை. மதியம் சாப்பாட்டிற்குக் கூட சிறுமி வரவில்லை என்று, சிறுமியின் தயார், அவரை தேடி வந்துள்ளார். சிறுமியின் தாயாருக்குச் சற்று காது சரியாகக் கேட்காது என்று கூறப்படுகிறது. எனினும், தன் பெண் குழந்தையைத் தேடி, அந்த கிராமம் முழுவதும் அந்த தாய் அலைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமி எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், தன் உறவினர்கள் உதவியுடன் ஊர் முழுக்க சிறுமியைத் தேடி வந்துள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியைத் தேடிச் சென்றுள்ளனர். அங்கு, சிறுமியின் உடல் சடலமாகக் காணப்பட்டு உள்ளது.

குறிப்பாக, சிறுமியின் உடலானது தண்ணீர் டிரம்மில் மூடி வைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, சிறுமி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 

இதைப் பார்த்து, சிறுமியின் தயார் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இது தொடர்பாகச் சாத்தான் குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டுக் காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், சிறுமியின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்சிற்கு தகவல் தெரிவித்து, சுமார் 3 மணி நேரமாக வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதன் பிறகு, சிறுமியின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு சிறுமிக்குப் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியின் உதடுகளில் ரத்த காயங்கள் இருப்பதால், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சிறுமி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவரை போலீசார் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இருவரில் ஒருவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், மற்றொருவர் போதைக்கு அடிமையாகி இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளன. தற்போது, இந்த 2 பேரிடம் போலீசார் மிகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு காய்ந்து மறைவதற்குள், மீண்டும் அதே சாத்தான்குளம் பகுதியில் நெஞ்சை நடு நடுங்கச் செய்யும் கொடூர கொலை நடந்துள்ள சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.