சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டு இருப்பதால், அந்த கடைகளில் இருந்த மது பாட்டில்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, அந்த மது பாட்டில்கள் எல்லாம் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது கடைகள் காலியாகவே உள்ளன.

எனவே, இந்த கடைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) மது வகைகள் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்றன. மேலும், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக முக கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

ஆனால், கொரோனா ஊரடங்கினால், தமிழக அரசுக்கு இந்த வரி வருவாயில் ரூ.6 ஆயிரம் கோடி பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

``தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மதுபான சில்லரை விற்பனை கடைகள் 7-5-2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லரை விற்பனை கடைகள் 18-8-2020 (நாளை) முதல் இயங்கும்.

மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது.

மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்"

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 

``சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

 
* சாமியானா பந்தல், மைக் செட் ஏற்பாட்டுடன் சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

* மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்ட்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும்.

* வாடிக்கையாளர்கள் நிற்க சாமியானா அமைக்க வேண்டும், அறிவிப்புகளை வெளியிட மைக் செட் பொருத்த வேண்டும்.

* டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.

* டாஸ்மாக் மதுபான கடையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மதுக்கடைக்கு வெளியே குறைந்தது 3 அடி இடைவெளிவிட்டு 50 வட்டங்கள் போட வேண்டும்"

என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார்,

``மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. (ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்), பீம் யு.பி.ஐ., யு.பி.ஐ. கியூ ஆர் கோட், கிரெடிட் கார்டு, இன்டர்நேஷனல் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணி சுமார் 2 மாதங்களில் நிறைவடையும். டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் வழியாக விற்பனை தொகையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"

என்று டாஸ்மாக்கில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வித்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது