“ஆண்டி என்றாலும் ஓகே தான், அதிபர் என்றாலும் ஓகே தான்” என்று சாமியார் நித்தியானந்தா கலகலப்பாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா, மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைக் கடத்தியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் அவர் ஆஜராகாமல், தலைமறைவானதால், அவருக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் தேடப்பட்டு வருகிறார்.

எனினும், இந்த கைது நடவடிக்கைப் பெற்றியெல்லாம் கவலைப்படாத சாமியார் நித்தியானந்தா, ஈக்வேடார் அருகே “கைலாசா” என்ற பெயரில் ஒரு தீவை உருவாக்கி, தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நாட்டில் குடியேறுவதற்குப் பல லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறி, நித்தியானந்தா அடுத்தடுத்து தொடர்ந்து அதிர்ச்சி அளித்தனர்.

மேலும், வாரம் ஒரு முறை ஆன்லைனில் தனது பக்தர்களுக்குச் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் சொற்பொழிவு மூலம் பேசியும் வருகிறார். 

இந்நிலையில், சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் பேசிய சாமியார் நித்தியானந்தா, “கைலாசா நாட்டிற்கு என்று, தனி கரன்சியை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கென்று புது வங்கியைத் தொடங்க இருப்பதாகவும்” அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். 

அத்துடன், “தனக்கு நிறைய நன்கொடைகள் வந்திருப்பதாகவும், அவற்றை நல்ல காரியங்களுக்காகச் செலவிடத் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக நமக்கு என்று ஒரு வங்கி தொடங்க உள்ளதாகவும்” கூறினார்.

குறிப்பாக, “வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு “ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா” என்ற புதிய வங்கி மிக விரைவில் உருவாக்கப்பட உள்ளது என்றும், நம் கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

“தனி ரிசர்வ் பேங்க் மற்றும் புதிய கரன்சிகள் வரும் விநாயகர் சதுர்த்தியான 22 ஆம் தேதி அதை முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது புதிய வீடியோவில் பேசி உள்ள சாமியார் நித்தியானந்தா, “விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள 'நித்தியானந்தாபீடியா' என்ற ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவில் “தன்னை ஆண்டி என்றாலும் ஓகே தான், அதிபர் என்றாலும் ஓகே தான்” என்றும், சாமியார் நித்தியானந்தா கலகலப்பாகப் பேசி உள்ளார். 

சாமியார் நித்தியானந்தாவின் இந்த பேச்சு, அனைவர் மத்தியிலும் கடும் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சாமியார் நித்தியானந்தாவின் இந்த பேச்சு, இணையத்தில் வைரலாகி வருகிறது.