“நான் இரக்கமில்லாத மனிதனா?” என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார். 

கோவை மாவட்டத்தில் 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ள திட்டங்களைக் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 166 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3 வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

அதனைத் தொடர்ந்து, சிறு குறு தொழில் நிறுவனத்தினருடனான கலந்தாய்வின் போது, கொரோனாவால் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதலமைச்சரிடம் தொழில்துறையினர் எடுத்துரைத்தனர். 

தொடர்ந்து, இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தமிழக அரசின் நடவடிக்கையால், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதாக” குறிப்பிட்டார். 

“போக்குவரத்து, விவசாயம், தொழில்துறை என அனைத்து வகையிலும் கோவை மாவட்டம் சிறந்து விளங்குவதாகவும்” முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டம், கோவை மாவட்டம் என்றும், கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என்றும் கூறினார்.

“அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக” குறிப்பிட்ட முதலமைச்சர், “கொரோனா தடுப்பு நடவடிக்கை 3 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது” என்றும் குறிப்பிட்டார்.

“கோவை மாநகரில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றும், கோவையில் புற வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தொழிற்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.

“அரசு அறிவித்த திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன” என்று கூறிய முதலமைச்சர், “கொரோனா பரவலைத் தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றும் புகழாரம் சூட்டினார். 

“கோவையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், கொரோனா தடுப்புப் பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது” என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

“கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழகத்திலேயே அதிக நலத்திட்டப் பணிகள் நடைபெறும் மாவட்டம் கோவை மாவட்டம் தான்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

“தமிழகத்தில் கொரோனா தொற்று, சமூக பரவலாக மாறவில்லை என்றும், அதனால் தான் இங்கே ஊடக நண்பர்கள் நீங்கள் எல்லாம் வந்து உள்ளீர்கள்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

“நான் சேலத்திற்கு மட்டும் முதல்வரா? என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுவதாகவும், நான் இரக்கமில்லாத மனிதன் என்று ஸ்டாலின் சொல்கிறார்” என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர், “நான் இரக்கமில்லாத மனிதனா?” என்றும் கேள்வி எழுப்பினார். 

மேலும், “கொரோனா பரவலைத் தடுக்க அரசுக்கு ஸ்டாலின் என்ன ஆலோசனைகளைக் கூறியிருக்கிறார்?” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

“மருத்துவ நிபுணர் சொல்லும் வழி முறையை பின்பற்ற வேண்டும் என கூறியதை மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார் என்றும், மருத்துவ நிபுணர் குழு அறிவுரைகளை பின் பற்றியிருந்தால் ஒரு எம்.எல்.ஏ.வை இழந்திருக்க அவசியமில்லை” என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

குறிப்பாக, “நாட்டிலேயே நோயை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே தலைவர் மு..க.ஸ்டாலின் தான்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

“அரசியலில் இருப்பதைக் காட்டிக் கொள்ளவே தினமும் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார் என்றும், முதலமைச்சர் பழனிசாமி கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக டிஜிபியை அழைத்து, கண்டிப்பாகவும் கடுமையாகவும் கூறியுள்ளதாகவும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இறுதியாக, “பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காவல் துறை கனிவாக நடந்து கொண்டு, அன்பைப் பெற வேண்டும்” முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, “தமிழகம் முழுவதும் உள்ள டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும்” என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.