“ஒற்றைத் தலைமை” கேட்கும் கட்சித் தொண்டர்களால் ஓபிஎஸ்சின் கை ஓங்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அதிமுகவில் புதிய சர்ச்சை வெடிக்கத்  தொடங்கியிருக்கிறது.

அதிமுகவில் சமீப காலமாக அடங்கியிருந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் பிரச்சனை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

அதாவது, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைதது. இதனால், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதைப்போலவே, ஒவ்வொரு முடிவுகளிலும் இபிஎஸ் கையே ஓங்கி இருந்தது. பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கமே நின்றனர்.

இதனால், சற்று கோபத்தில் இருந்து வந்த ஓபிஎஸ், அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அத்துடன், தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிந்ததில் இருந்தே, அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.

அதில் முக்கியமானது, சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல், அதிமுக தலைமை திணறி வருவது தான்.

அதன் படி, சசிகலா அரசியல் ரீ என்ட்ரியின் முன்னோட்ட காட்சிகள் எல்லாம் தமிழக அரசியலில் ஒவ்வொன்றாக தற்போது அரங்கேறி வருகின்றன. 

அதன் படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் இடையே சசிகலா தொலைப்பேசியில் பேசி வரும் உரையாடல்கள் ஒவ்வொன்றாக
வெளியாகி வருவது, அக்கட்சியினரிடையே பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. 

சசிகலாவின் இந்த செயல்பாடுகள் அதிமுக தலைமைக்கான செக் வைக்கும் நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், சசிகலாவுடன் தொலைப்பேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்பட பலரும் வரிசையாக அந்த கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும், அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசி வரும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளிவருவது, அதிமுக தலைமையை முற்றிலுமாக ஆட்டம் காண வைத்திருக்கிறது. 

இப்படியான அதிமுக அரசியல் சூழலில் தான், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருகை தரும் போது, வெளியே காத்திருந்த அதிமுக தொண்டர்கள் சிலர், “ஒற்றை தலைமை வேண்டும்” என்கிற முழக்கத்தைக் கூட்டமாகச் சேர்ந்து எழுப்பினார்கள். இதனால், அதிமுக தலைமையகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுகவில், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, இதே பிரச்சனை வெடித்தது. முக்கியமாக, இதே பிரச்சனையை வலியுறுத்தி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மல்லுக்கட்டிக் கொண்டார்கள். இந்த சண்டையெல்லாம் தற்போது தணிந்து காணப்பட்டு கட்சி சுமுகமாக நடைபெற்று வரும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சர்ச்சைகள் வெடித்திருப்பது, ஓபிஎஸ்சின் கை ஓங்க வைப்பதற்கான தந்திரம் என்றே கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் அடங்கியிருந்த பிரச்சனை மீண்டும் தூபம் போடப்பட்டு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.