2 வது திருமணம் செய்த 3 வது மாதத்தில், 3 வதாக ஒருவரை காதலித்து அந்த காதலனுடன் மனைவி ஓடிப்போனதால், ஆத்திரமடைந்த 2 வது கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் கத்தேரி கிராமம் சாமியாம்பாளையத்தை சேர்ந்த அன்பரசு என்பவர், அங்குள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த சுந்தரராஜன் மனைவி பத்மாவுடன் அறிமுகம் ஆகி உள்ளார். 

இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது. இதனால், அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக, அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டு வந்ததால், இனியும் இப்படி திருட்டுத்தனமாக சந்திக்க முடியாது என்று முடிவு செய்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் படி இது, பத்மாவுக்கு 2 வது திருமணம் ஆகும். இதில், முதல் கணவனின் நிலை என்ன பற்றிய முழுமையான தகவல்கள் தெரியவில்லை.

மேலும், அன்பரசை 2 வதாக திருமணம் செய்துகொண்ட பத்மாவின் வாழ்க்கை ஓரளவுக்கு மகிழ்ச்சியாகவே சென்றுக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனைவி பத்மாவிற்கு அந்த பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். இதனால், தமிழ் செல்வத்துடன், அவருக்கு 3 வதாக காதல் ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, 2 வது கணவன் அன்பரசுக்குத் தெரியாமல் அவர் மனைவி பத்மா, தமிழ் செல்வனை அடிக்கடி தனிமையில் சந்தித்து தனது காதலை வளர்த்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில், அன்பரசை விட்டு விட்டு தமிழ் செல்வனுடன் வாழ முடிவு செய்தார் பத்மா, அடிக்கடி அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த விசயம், எப்படியோ, அன்பரசுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தன் மனைவிடம் சண்டை போட்டுள்ளார்.

ஆனாலும், தனது முடிவை மாற்றாமல் பத்மா கடைசி வரை உறுதியாக இருந்துள்ளார். மனைவியின் கள்ளக் காதல் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், நேற்று முன் தினம் மாலை 3 வது காதலன் தமிழ் செல்வனும், பத்மாவும் சாமியாம்பாளையத்தில் இருந்து கத்தேரிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்று உள்ளார். 

அதே நேரத்தில், தன் மனைவி, அவளுடைய கள்ளக் காதலன் உடன் ஊரை விட்டு தப்பித்து செல்வது எப்படியோ அன்பரசுக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அன்பரசு, கையில் மிளகாய்ப் பொடியுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று அவர்கள் இருவரையும் வழி மறித்து நின்று உள்ளார். 

அப்போது, தமிழ் செல்வன் வாகனத்தை நிறுத்தியதும் அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி உள்ளார். இதில் கண் திறந்து பார்க்க முடியாமல் தமிழ் செல்வன் திணறியபோது, கண் இமைக்கும் நேரத்தில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பத்மாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தி உள்ளார். 

இதில், பத்மாவிற்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த 3 வது காதலன் தமிழ் செல்வன், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடி அங்குள்ள தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

அங்கு, பத்மாவிற்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, 
அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பதுங்கியிருந்த அன்பரசைக் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, பத்மாவிற்கு கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த முதல் கணவர் சுந்தர்ராஜனுடன் திருமணமாகி கீர்த்தி வாசன் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.