சகாயம் ஐ.ஏ.எஸ் இன்று புதிய கட்சி தொடங்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பையும் இன்று வெளியிடுகிறார்.

தமிழகத்தின் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். 

புதுக்கோட்டையை சேர்ந்த சகாயம், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியதன் மூலமாக, அவரின் நேர்மை பாதையால் கடைசியாகத் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். 

“தமிழகத்தில் கிரானைட் முறைகேடு வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக ஆதாரம் திரட்டி, சிறப்பாக செயலாற்றியதுடன், 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்' என்று, ஊழல் செய்யாத அரசு ஊழியராக பொது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் ஐ.ஏ.எஸ். சகாயம். பொது மக்களிடம் தனது நேர்மையின் மூலமாக, மிக எளிமையான வகையில் பெயரையும், புகழையும் தனது சொந்தமாக சேகரித்து வந்தார் சகாயம்.

இப்படியாக, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், விருப்ப ஓய்வு கேட்டுக் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மனு அளித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அரசியல் பாதையில் காலடி எடுத்து வைப்பதற்காகக் கடந்த மாதம் 21 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் சகாயம்.

அப்போது, சென்னையில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சகாயம், “தமிழகம் தற்போது ஊழலில் சிக்கித் தவிப்பதாகக் கவலை” தெரிவித்தார். 

அத்துடன், “தமிழகத்தை மீட்டெடுக்க புதிய மாற்றத்தை நோக்கி அனைவரும் செல்ல வேண்டும்” என்றும், அப்போது அவர் கேட்டுக்கொண்டார். அப்போதே, அவரின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் சகாயம் ஐ.ஏ.எஸ். புதிய கட்சியைத் தொடங்குகிறார். இது தொடர்பாக அவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்கிறார். அப்போது, தனது கட்சி பெயரை அவர் அறிவிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

இவற்றுடன், வரும் சட்டமன்ற தேர்தல் களத்தைச் சந்திப்பது, மக்களுக்கான வாக்குறுதிகள் அளிப்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளைச் சகாயம் இன்றைய தினம் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சகாயம் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும், அவரது தீவிரமான ஆதரவாளர்களும், நலம் விரும்பிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்றைய தினம் தனது அரசியல் கட்சியைச் சகாயம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.