பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கி உள்ளனர்.

சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது, குறித்து சமூக வலைத்தளங்களில் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக முன் வைத்து வந்தனர். 

இதனையடுத்து, “போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?” என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர். அதன் தொடர்ச்சியாக, நிலையில், இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பி வைத்திருந்தனர். 

அதே போல், அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர் பாபா, அவரது வழக்கறிஞர், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆகிய 3 ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 

இதனையடுத்து, அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் மட்டுமே இன்று விசாரணைக்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் ஆஜர் ஆனார்கள். ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவசங்கர் பாபா மட்டும் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

அவரது தரப்பு வழக்கறிஞர் நாகராஜன் என்பவர் மட்டுமே ஆஜராகியிருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாகக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி நேரடியாக விசாரணை நடத்தினார். அப்போது, ஆஜரானவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

முக்கியமாக, குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது, “அவர், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக, மருத்துவ சான்றிதழ்களும் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களும்” ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதே நேரத்தில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வந்த மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, போலீசாரிடம் மேலும் 3 மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்தனர். 

இப்படியாக, சிவசங்கர் பாபா மீது இது வரை 15 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டு உள்ளன. அந்தப் புகார்கள் குறித்து, சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக இது வரை நடத்தப்பட்ட விசாரணையில், “சிவசங்கர் பாபா வீடியோ கால் மூலமாகவும் பாலியல் தொல்லை அளித்ததும், பள்ளி விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளைப் பஜனையில் பங்கேற்க வைப்பது போல அழைத்துச் சென்று, அவர்களுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும்” தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த பாலியல் சம்பவங்களுக்கு சில ஆசிரியைகளும் உடந்தையாக இருந்ததும் தற்போது அம்பலமாகி உள்ளது.
 
குறிப்பாக, சிவசங்கர் பாபா தற்போது தலைமறைவாகி விட்டதாகவே காவல் துறையினர் கருதுகின்றனர். 

இந்த நிலையில் தான், சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்குகளைத் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். 

முக்கியமாக, சிவசங்கர் பாபா தற்போது உத்ரகாண்ட்டில் சிகிச்சையில் இருப்பதால், அங்குச் சென்று விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபா விரைவில் கைது செய்யப்படலாம் என்றும், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.