முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 90 நாள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு  நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை விளக்கம் அளித்தது.

பரோல் கோரி பேரறிவாளனின் தாயார் அளித்திருந்த மனு நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ``முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான்" என்றும், ``தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளான். புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு  நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை விளக்கமளித்தது. கொரோனா அச்சத்தால் பேரறிவாளனின் பரோல் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் சிறை தண்டனை நிறுத்திவைப்பு விதிகளில் பரோலுக்கு இடமில்லை என்றும் சிறைத்துறை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனின் பரோலில் தமிழக அரசு ஏன் முடிவெடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவரது பரோல் மனு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். 

அற்புதம்மாளின் மனுவை கடந்த ஜூலை 29ம் தேதி சிறைத்துறை ஐ.ஜி நிராகரித்து விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவெடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.  பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.