“தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை” என்று, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் வசந்தி தேவி உள்ளிட்ட 67 பேர், முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சுற்றுச்சூழல் கோரிக்கைகள் அடங்கிய அவசர கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.

அந்த கடிதத்தில், “கூட்டாட்சி கொள்கைகளை முன்னிறுத்தி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றும், 

கொரோனா வைரஸ் நெருக்கடியின் வேர்கள் வளர்ச்சியின் பெயரில் நிலத்தை - அழிக்கும் திட்டங்களில் உள்ளது” என்றும், குறிப்பிட்டு சுட்டிக்காட்டி இருந்தனர். 

“ஆனால், இந்த நெருக்கடி கூட, உலகளாவிய சூழலியல் சரிவினால் வரப்போகும் பிரச்சனைகளுக்கான ஒரு தொடக்கக்காட்சி மட்டுமே” என்றும். வரப்போகும் விளைவுகளைச் சுட்டிக்காட்டி இருந்தனர்.

குறிப்பாக, “கனமழை, வெப்ப அலைகள், நீண்டகால வறட்சி மற்றும் சூறாவளிகள் போன்ற கடுமையான வானிலை நிகழ்வுகள் புதிய இயல்பு நிலையாக மாறும். 1000 கிலோ மீட்டர் கடற்கரை கொண்ட தமிழகம், கடல் மட்டம் உயர்வினால் ஏற்படக்கூடிய உப்புத் தண்ணீர் ஊடுருவல் மற்றும் நில இழப்பினால் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலப்பகுதியாகும். 

நமது நிலத்தின் அழிவை நாம் நிறுத்தவில்லையெனில் இந்த இயற்கை நிகழ்வுகளினால் தமிழகம் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் கூடிக்கொண்டே போகும். 

உங்கள் ஆட்சி கூட்டணி சமத்துவம், பன்முகத்தன்மை, சூழலியல் நிலைத்தன்மை போன்ற கொள்கைகளுக்கு ஆதரவளித்து, சூழலியல் பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராகத் தைரியமாகக் குரல்கொடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக மற்றும் இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கியது.

நாட்டில் வலிமையான சுற்றுச்சூழல் சட்டங்களைக் கொண்டுவந்து வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நேரத்தில், EIA மற்றும் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பானைப் போன்ற சட்டங்கள் அளிக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் மேலும் குறைப்பதில் மத்திய அரசு பரபரப்பாகச் செயல்பட்டு உள்ளது.

 சுற்றுச்சூழல் சீரழிவு ஏழை மக்கள், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை அளவுக்கதிகமாக பாதிக்கும். சமத்துவம் மற்றும் சமுகநீதிக் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனில், தமிழ்நாடு இன்னும் வலிமையான சட்டங்களை நிறைவேற்றி, மத்திய சட்டங்களில் இல்லாத தகுந்த சூழலியல் மேற்பார்வையை இங்கு கொண்டுவர வேண்டும்” என்றும், வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

அதில், “சுற்றுச்சூழலை சீரழிக்கும் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன் முனையம், சித்தூர் - தச்சூர் 6 வழி சாலை திட்டம் மற்றும் கூடன்குளத்தில் அமைக்கப்படவிருக்கும் கூடுதலான நான்கு அணு உலைகள் ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்றும். வேடந்தாங்கல் சரணாலயத்தின் எல்லைக் குறைப்பு மற்றும் பழவேற்காடு சரணாலயத்தில் பாதுகாப்புக்குட்பட்ட இடைப்பகுதியை குறைப்பதற்கு முந்தைய அரசின் கோரிக்கைகளைத் திரும்பப்பெற வேண்டும்” என்றும், குறிப்பிட்டு இருந்தனர்.

அத்துடன்,  “டெல்டாவில் ஹைட்ரோகார்பன் சுரண்டலுக்கு எதிரான உறுதிமொழியை வலிமைப்படுத்துதல் - அனைத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அனைத்து ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளையும் கைவிட வெண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து வந்தது. 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி உள்ளன என்றும், அவை அனைத்தும் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “120 புதிய உழவர் சந்தைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 24 செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்” என்றும், கூறினார்.

குறிப்பாக, “புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும், 8 வழிச்சாலை திட்டம் மற்றும் ஹாட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை தமிழகத்தில் அனுமதிக்கப்படாது” என்றும், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதிப்படத் தெரிவித்தார்.