சில தினங்களுக்கு முன், திமுகவில் முக்கிய பொறுப்பிலிருந்து எம்.எல்.ஏ கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லிக்கு சென்று, நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
 
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கு.க.செல்வம் பேசிய போது, திமுக தலைமை மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. 

திமுக கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதையொட்டி, அவரைத் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

கடிதம் கிடைக்கப்பெறவில்லை என சொல்லி வந்த கு.க.செல்வம், இடையில் தமிழக பாஜகவின் தலைமை கழகம் சென்று, அங்குள்ளவர்களோடு நட்பு பாராட்டினார். இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அங்கு அவர் இணையவில்லை.

இதற்கிடையில் தற்போது, இன்றைய தினம் கடிதம் கிடைக்கப்பெற்றுவிட்டதாக கூறிய கு.க.செல்வம், பதில் கடிதமொன்றை தலைமைக்கு எழுதியுள்ளார். அதில் வரும் விவரங்கள், பின்வருமாறு :

``தங்களுடைய 05.08.2020 தேதியிட்ட நோட்டீஸ்‌ கிடைக்‌கப் பெற்றேன். கிடைத்த 7 நாட்களுக்குள்‌ பதில்‌ அளிக்க வேண்டும்‌ என்றும்‌ _ பதில்‌ அளிக்கவில்லை என்றால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று: கூறப்பட்டுள்ளது. ஆனால்‌ நடவடிக்கை எடுத்து என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள்‌.

ஆகவே என்‌ பதில்‌ கிடைக்கும்‌ முன்னரே நான்‌ குற்றவாளி என்று ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே என்னை தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின்‌ தற்காலிக நீக்கத்தை வாபஸ்‌ பெறுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌ தங்கள்‌ நோட்டீஸ்க்கு நான்‌ விபரமாக விளக்கம்‌ அளிப்பதற்கு சில விவரங்கள்‌ தேவைப்படுகின்றன. தாங்கள்‌ விவரங்கள்‌ இல்லாமல்‌ மேலோட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸில்‌ நான்‌ பொய்யான தகவல்கள் சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன பொய் என்று குறிப்பிடப்படவில்லை.

அதுபோன்று இரண்டாம்‌ குற்றச்சாட்டில்‌ நான்‌ அவதூறாக பேசியதாக கூறி உள்ளீர்கள்‌. ஆனால்‌ நான்‌ பேசியதில்‌ எதை அவதூறுகள்‌ என்று குறிப்பிட்டு சாட்டப்படவில்லை. இரண்டு இணைப்புகளை அனுப்பி என்னை அனுமானிக்க சொல்லியருக்கிறீர்கள்‌. திராவிட முன்னனேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள்‌ மற்ற
கட்சி தொண்டர்களையும்‌ தலைவர்களையோ சந்திக்கக்கூடாது என்று எங்கும்‌ குறிப்பிடவில்லை. மாற்றான்‌ தோட்த்து மல்லிகையும்‌ மணக்கும்‌ என்பதுதான்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்களது கோட்பாடு.

நம்‌ தலைவர்‌ கலைஞர்‌ கருணாநிதி அவர்களை பி.ஜே.பியை சேர்ந்த பாரத பிரதமர்‌ நேரில்‌ வந்து பார்த்தது அனைவருக்கும்‌ தெரியும்‌. ஆகவே கட்சியின்‌ மாண்பை நான்‌ மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு
விரோதமானது.

ஆகவே, சட்டப்படி விசாரணை வைத்து நான் கேட்ட மேற்படி விவரங்களை வழங்கினால், விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயார்" என்று கூறியுள்ளார் செல்வம்.

திமுக- வுக்கு, பலத்த சிக்கலை தந்துவருகிறது கு.க.செல்வத்தின் இந்த நடவடிக்கைகள். மேற்கொண்டு, திமுக தரப்பில் விரைவில் அறிக்கை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.