தமிழக அரசு பணியில் உள்ள பெண் தற்காலிக ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல ஒன்பது மாத பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழக பணியாளர், நிர்வாக சீர்த்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாரணையில், “தமிழக அரசில் நிரந்தர பணியில் உள்ள பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கு பேறுகால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த சலுகை தற்போது தமிழக அரசில் தற்காலிகப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சில துறைகளில் அவசர நிலை ஏற்படும்போது தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் பெண் ஊழியர்களும் அடங்குவர். இவர்கள் தங்கள் பேறுகாலத்தின்போது 270 நாட்கள், அதாவது 9 மாதங்களுக்கு குறைவாக இருப்பின் அவர்களுக்கு முழு சம்பளத்துடன் பேறுகால விடுப்பை சம்பந்தப்பட்ட துறை அதிகாரி வழங்கலாம். அதேநேரம், அந்த பெண் பணியாளர் குறைந்தபட்சம் ஓராண்டு பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

மேலும், 2 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பெண்களுக்கும் (அதாவது இரண்டு குழந்தைகள் வரை), முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற பெண்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும். குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் இந்த சலுகை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் ஏராளமாக அரசுத் துறையில் தற்காலிகமாக பணியாற்றும் ஏராளமான இளம் தாய்மார்கள் பயன்பெறுவார்கள். தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு பெண் ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது

இருப்பினும், யாராக இருப்பினும் முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்ததால் 2வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு இல்லை என்று ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3-வது குழந்தைக்காக மத்திய அரசின் பெண் ஊழியருக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு தந்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

`மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது அவர்களுக்காக அல்ல, பிறக்கும் குழந்தைகளுக்காக. பிறந்து ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள்வரை குழந்தை, தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். நம் நாட்டில், அலுவலகங்களில்வைத்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வசதிகள் இல்லை. அதேபோல, தாய்ப்பாலைச் சேகரித்து, பாதுகாத்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் வசதிகளும் இல்லை. அதனால்தான் விடுமுறை அவசியமாகிறது. குறைந்தது, ஒரு வருடமாவது குழந்தை பெற்ற பெண்களுக்கு விடுமுறை வேண்டும். குழந்தையைவிட்டு தாய் தூரத்தில் இருந்தால், தாய்ப்பால் கொடுக்காமல்விட்டால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்' என்பது மருத்துவர்கள் சொல்லும் கருத்து.

அதன்படியே, இப்போது இந்த தற்காலிக பணியாளர்களுக்கான பேறுகால விடுப்பு நடைமுறையும் வழக்கத்துக்கு வந்துள்ளது.

தனியார் நிறுவனங்களிலும், இதேபோன்ற ஏதேனுமொரு நடைமுறையை அரசு கட்டளையாக பிறப்பித்தால், உபயோகமாக இருக்கும் என்பது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது