ஆன்லைன் விளையாட்டுகள், ஃபாண்டஸி விளையாட்டுகள் ஆகியவற்றை பற்றி விளம்பரங்கள் அதிகளவில் தொலைக்காட்சிகளில் வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்துள்ளது. இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்துபவையாக இருப்பதாகவும், நிதி அபாயங்களைக் பற்றி சரியான தகவல்களை விளம்பரங்களில் தெரிவிப்பதில்லை எனவும் விளம்பர விதியையும் முறையாக பின்பற்றுவதில்லை சொல்லப்பட்டு இருக்கிறது. இதனால் அனைத்து ஒலிபரப்பு/ஒளிபரப்பு நிறுவனங்களும் சில முக்கியமான விதிகளை தெரிவித்திருக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம். அவை,


* 18 வயதுக்கு குறைவனவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வெல்வதாகவோ கலந்துக்கொள்ளலாம் என்றோ எந்த விளையாட்டு விளம்பரமும் காட்டக்கூடாது.
* விளம்பரம் எந்த மொழியில் உள்ளதோ, அந்த மொழியிலேயே 'இந்த விளையாட்டில் நிதி அபாயம் உள்ளது மற்றும் இது அடிமையாக்கக்கூடியது' என்னும் வாசகம் ஒலி மற்றும் ஒளி வடிவில் விளம்பரத்தில் இடம்பெற வேண்டும் .
* விளம்பரத்தின் 20 சதவீத இடத்துக்குக் குறையாமல் இந்த விளையாட்டுகளில் உள்ள நிதி அபாயங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
* இதன் மூலம் உண்மையான பணத்தை வெல்லலாம் என்றோ, இது ஒரு வருவாய் வாய்ப்பென்றோ, மாற்று வேலைவாய்ப்பென்றோ, இதை விளையாடுபவர் மற்றவர்களை விட வெற்றியாளர் என்ற தொனியிலோ விளம்பரங்கள் இருக்கக்கூடாது.
* இந்திய விளம்பர தரநிர்ணயக் குழுவின் விதிகளை விளம்பரங்கள் பின்பற்ற வேண்டும்.
இந்த விதிகளை அனைத்து ஒலிபரப்பு/ஒளிபரப்பு நிறுவனங்களும் அவசியம் பின்பற்ற வேண்டும் என் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.