மன வளர்ச்சி குன்றிய பெண்ணை, தந்தை - மகன் இருவரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

“உலகமே ஓர் மனநல காப்பகம் தான். அதில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு மன நோய் பாதிப்பு இருக்கவே செய்கிறது. சிலருக்கு புத்தியில், சிலரின் புத்தியோ காமத்தில். அப்படி, புத்தியில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணை, புத்தி முழுவதும் காமத்தின் வளர்ச்சியில் வளர்த்தெடுத்த தந்தையும் - மகனும், மாறி மாறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சோக நிகழ்வு, நம்ம ஊரில் தான் நிகழ்ந்திருக்கிறது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான குமாரின் மகன் 22 வயதான கார்த்திக், அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அந்த வீட்டில் 32 வயதில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருந்துள்ளார். அடிக்கடி அங்கு சென்று வந்த நிலையில், அந்த 32 வயதான பெண்ணை, 22 வயதான இளைஞன் கார்த்திக், தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்படவே, அந்த பெண்ணை மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள், இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணிற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அத்துடன், அவருக்கு மேலும் உடல் நலம் குறைவு ஏற்பட்டதால், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதனைத்தொடர்ந்து, அங்குள்ள காவல்நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கடந்த ஜூன் 12 

ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தியதில் “மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கார்த்திக் என்பதை கண்டுபிடித்து அவரை முதலில் கைது செய்தனர். 

இதனையடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கைது செய்யப்பட்ட கார்த்திக் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், கார்த்திக்கின் தந்தை குமார் தான் முதன் முதலில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், கார்த்திக்கின் தந்தை குமாரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தந்தை - மகன் இருவரும், மாறி மாறி பாலியல் பாலத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, தந்தை - மகன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை மாவட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியதில், மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக, மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 
தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, தந்தை - மகன் இருவர் மீதும் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

அதன்படி, தந்தை - மகன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார், சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.