தலைநகர் டெல்லியில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் வலுத்து வரும் நிலையில், தமிழ முதல்வர் பழனிச்சாமி வேளாண் திருத்த சட்டங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான திமுக தரப்பிலிருந்து அவருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி, ஸ்டாலினை `அறிக்கை நாயகன்' என விமர்சித்தார். திமுக தரப்பில், முதல்வரை `அரசாணை நாயகன்' என விமர்சித்தார் எம்.பி.கனிமொழி. இதுபற்றி பேசிய கனிமொழி, ``இந்த அரசு அரசாணை மட்டுமே வெளியிடுகிறது. எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை" என நேற்று (டிசம்பர் 3) கூறினார்.

இந்நிலையில் மதுரையில் இன்று (டிசம்பர் 4) நடைபெற்ற விழாவொன்றில் முதல்வர் பழனிச்சாமி பேசியபோது, 

``அதிமுக அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் எதிா்க்கட்சியினரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவா்களது பாா்வையில் கோளாறா, மனதில் கோளாறா எனத் தெரியவில்லை.  திமுக ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை எனக் கூறும் எதிா்க் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து பாா்த்தால் தான் தெரியும். அறைக்குள்ளே அமா்ந்து கொண்டிருந்தால், வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாது" என்று கூறினார்.

இந்நிலையில், வேளாண் திருத்த சட்டத்தை ஆதரித்ததற்காக முதல்வரிடம் பத்து முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். தனது அக்கடிதத்தில், ``எந்த லட்சணத்தில் மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார்? போகிற இடத்தில் எல்லாம் 'நான் விவசாயி' என்று அவர் சொல்வதே, தன் வேடம் கலைந்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில்தான்! ஏனென்றால், அவர் உண்மையான விவசாயி அல்ல; இடைத்தரகர்தான். அதையேதான் அரசியலிலும் செய்து பதவி சுகம் அனுபவித்து, கஜானாவைக் கொள்ளையடித்து வருகிறார். அதற்கான வெகுமக்களின் தீர்ப்பும் தண்டனையும் நெருங்கி வருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இத்துடன் அவர் இணைத்திருக்கும் பத்து கேள்விகள் :

``* பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்கள் மூன்றிலும் எங்கேயாவது ஓரிடத்திலேனும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று 'நானும் விவசாயி' என்கிற எடப்பாடி பழனிசாமி எடுத்துக்காட்டுவாரா?

யாருக்கு விற்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தச் சட்டங்கள் அள்ளிக் கொடுப்பதை 'டெண்டர் விவசாயி' எடப்பாடி அறிவாரா?

* தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி, பெரிய வியாபாரிகள் - பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய விவசாயிகளை அடிமையாக ஆக்குகிறது என்பதை அடிமை ஆட்சி நடத்தும் தலைமை அடிமையான பழனிசாமி எப்படி அறிவார்?

* விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குப் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்ட இந்திய உணவுக்கழகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் ஆகியவை இனி இருக்குமா என்பதையே கேள்விக்குறியாக்கியுள்ள இந்தத் திருத்தச் சட்டங்களை எந்த அடிப்படையில் பழனிசாமி ஆதரிக்கிறார்?

* விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கான உணவுப் பாதுகாப்பும், பொதுவிநியோகத் திட்டத்தின் வாயிலாக அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகமும் இனி தொடருமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் வைத்திருக்கிறார்?

* இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழகத்தில் தலைவர் கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு மூடு விழா நடத்துவதுதான் இந்தத் திருத்தச் சட்டங்களின் நோக்கம். "நாங்களே அவற்றுக்கு மூடுவிழா நடத்திவிட்டோம். இனி மத்திய அரசு எப்படி மூட முடியும்?" என்று பதில் சொல்லப் போகிறாரா முதலமைச்சர் பழனிசாமி?

* இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 95 சதவீதம் பேர் சிறு - குறு விவசாயிகள்தான். இவர்கள் விளைவிக்கும் உணவு தானியங்கள் – பழங்கள் - காய்கறிகளுக்குக் குளிர்பதனக் கிடங்கு கிடையாது. குளிர்பதனக் கிடங்கு வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு விவசாயம் செல்லும் வகையில் வேளாண் திருத்தச் சட்டம் உள்ளது என்பதாவது உறைக்கக்கூடிய அளவில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரா? அல்லது பதவி சுகத்தில் உணர்விழந்து உறைந்து போய்க் கிடக்கிறாரா?

* விவசாயிகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் என்கிற திருத்தச் சட்டத்தின் அம்சம் நடைமுறைக்கு எந்த வகையில் சாத்தியம் என்பதை எடப்பாடி பழனிசாமி விளக்குவாரா?

* கரும்பு ஆலைகளுடன் ஒப்பந்தம் போட்டு, விளைந்த கரும்பைக் கொடுத்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உண்மையான விவசாயிகளுக்குரிய நிலுவைத் தொகையைக் கிடைக்கச் செய்தாரா, 'நானும் விவசாயி' என்கிற முதலமைச்சர்?

* வேளாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ள நிலையில், அது குறித்து கொரோனா காலத்தில் அவசர அவசரமாகத் திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என்பதாவது, மாநில உரிமைகளை அடமானம் வைத்து ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியுமா?