சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.


அதிமுகவின் பொதுச் செயலராகவும், நான்கு முறை தமிழக முதல்வராகவும், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் கடந்த 2016ல் டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார்.  


அவருக்கு அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. 57.8 கோடி ரூபாய் செலவில், பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம் 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்விடத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் தேர்தல் பரப்புரைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி பயன்படுத்தும் 'மக்களால் நான்.. மக்களுக்காக நான்..' ( "BY THE PEOPLE FOR THE PEOPLE" ) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தைச் சுற்றி 9 ஏக்கர்  இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் இந்த நினைவிடத்தைப் பராமரிக்க, பொதுப்பணித்துறைக்கு அரசு 9 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்த நினைவிடம் திறப்பின் போது முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக் கணக்காண அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள்- 

* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் 9.09 ஏக்கர் மொத்த பரப்பளவில் அமைந்துள்ளது  

* 8555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

* உப்பு காற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு கான்கீரிட் மேற்பரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

* நினைவிட வளாகத்தில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அறிவுத்திறன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது

* பக்கவாட்டுகளில் உயர்தர பளிங்கு கற்களும் தரைப் பகுதியில் உயர்தர கருங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன

* நினைவிட வளாகத்தில் இரு பக்கவாட்டிலும் 110 அடி நீளத்திற்கு மேற்கூரை கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

* அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும் புகைப்பட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன

* நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது

* நுழைவாயிலில் மறைந்த முதல்வர் எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது 

* நினைவிடத்தின் இரு புற நுழைவு பகுதிகளிலும் ஆண் சிங்க வடிவில் கருற்கற்களால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது 

* ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அணைய விளக்கு வைக்கப்பட்டுள்ளது